பியாங்யாங், செப். 18–
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில், தென்கொரியா ஐநாவில் இன்று முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மற்றும் வடகொரியா மீது பல தடைகளை விதித்து தனிமைப்படுத்தியுள்ளன. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யாவில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், பல்வேறு ராணுவ ரீதியான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தி வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தென்கொரியா கவலை
கிம் ஜாங் உன் ரஷ்யாவில் 6 நாட்கள் தங்கியிருந்தார். இதன் போது, ரஷ்ய ஜனாதிபதி புதின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சொய்கு ஆகியோருடன் பல சுற்று பேச்சுக்களை நடத்தினார். ரஷ்யாவின் அரசு நடத்தும் ‘ஆர்ஐஏ’ செய்தி நிறுவனத்தால் நேற்று வெளியிடப்பட்ட வீடியோவில், கிம் ரஷ்ய தூர கிழக்கு நகரமான ஆர்டியோமில் தனது ரயில் பெட்டிக்கு சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்வதையும், இராணுவ இசைக்குழுவின் ஒலியுடன் விடைபெறுவதையும் காட்டுகிறது. ஆர்டியோம் வட கொரியாவுடனான ரஷ்யாவின் எல்லையில் உள்ள காசன் நிலையத்திலிருந்து சுமார் 254 கிமீ (159 மைல்) தொலைவில் உள்ளது.
இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தை தென்கொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. ஆயுத பரிமாற்றம் குறித்து இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது ஐநா தீர்மானத்திற்கு எதிரானது என தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இன்று தொடங்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முறையிட தென்கொரியா திட்டமிட்டுள்ளது.