செய்திகள்

ரஷ்யாவில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்திய வாக்னர் குழுவுக்கு எச்சரிக்கை

மாஸ்கோ, ஜூன் 27–

ரஷ்யாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தி வாக்னர் குழுவுக்கு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைனுக்கிடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. அண்மையில் வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் வெடித்த மோதல் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின், வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது போன்ற துரோகம். இதற்கு வாக்னர் குழுவுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ரஷ்ய நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் பேசிய புதின், “வாக்னர் குழுவின் கிளர்ச்சியின்போது, உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும், ரஷ்யர்கள் ஒருவரையொருவர் கொலை செய்துகொள்ள வேண்டும் என விரும்பினர். ஆனால், எனது உத்தரவின் பேரில் பெரிய அளவிலான தாக்குதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ரஷ்யர்களின் தேசபக்தி பெரும் காரணம். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிரிகள் நினைத்தது நடக்கவில்லை

ரஷ்யாவின் எதிரிகள் விரும்பியது இந்தச் சகோதர படுகொலையைத்தான். ரஷ்யாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல், உள்நாட்டு கொந்தளிப்புகளை ஏற்படுத்த செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்பதை ரஷ்ய பொதுமக்களின் ஒற்றுமை காட்டுகிறது என்று கூறி இருந்தார்.

மேலும் கூறும்போது, பாதுகாப்பு அமைச்சகம் அல்லது பிற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் வாக்னர் குழு ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம், ரஷ்யாவுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்திடமே திரும்புவதற்கு விரும்பினால் அதையும் செய்துகொள்ளுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுடன் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக, வாக்னர் படை பின்வாங்கியிருக்கிறது. இதற்கிடையே வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் 11 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நாங்கள் கண்டன ஆர்பாட்டம் தான் செய்தோம். அரசை கவிழ்க்கும் எண்ணமில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *