செய்திகள்

ரஷியாவில் பயிற்சி முடித்த ககன்யான் விண்வெளி வீரர்கள் 2 பேர் அமெரிக்கா பயணம்: இஸ்ரோ தகவல்

புதுடெல்லி, மே.16-–

புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பின்னர், முதல் முறையாக 300 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ்களை நேற்று வழங்கியது.

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான் அது அமலுக்கு வரும். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில போராட்டங்கள் வெடித்தன.

எனவே விதிமுறைகள் வெளி யிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி ஏற்று இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி வெளியிடப்பட்டன.

இதன் மூலம் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. இந்த தகுதிகாலம் (இந்தியாவில் வசித்த காலம்) தொடக்கத்தில் 11 ஆண்டுகள் என்று இருந்ததை 5 ஆண்டுகள் எனவும் தளர்த்தப்பட்டது.

இதன்படி ஏராளமானோர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். இதற்கான இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதாக தெரிகிறது.

இவர்களில் முதல்கட்டமாக 300 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க அவர்களை தகுதியான பயனாளிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்தது. அவர்களுக்கு சான்றிதழ்கள் தயார் ஆகின.

இதனைத்தொடர்ந்து 300 பேரில் தேர்ந்து எடுக்கப்பட்ட 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வழங்கினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை அவர் விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய உளவுத்துறை தலைவர் தபன்குமார் தேகா, இந்திய ரிஜிஸ்திரார் ஜெனரல் மிருத்யுன்ஜய் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சான்றிதழுக்காக தேர்வு செய்யப்பட்ட மற்றவர்களுக்கு டிஜிட்டல் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் இ.மெயில் மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை சான்றிதழுக்கு தேர்வு பெற்ற 300 பேரில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்றுள்ளார். ‘இது வரலாற்று சிறப்புமிக்க நாள்’ என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *