செய்திகள் போஸ்டர் செய்தி

ரவுடிகள் சரமாரி சுட்டதில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் பலி

* போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்தனர்

* ஜேசிபி யந்திரத்தை ரோட்டின் குறுக்கே நிறுத்தினார்கள்

* கிராமத்துக்குள் நுழைய முடியாதபடி தடை ஏற்படுத்தினார்கள்

60 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடியை பிடிக்கப்போன இடத்தில் விபரீதம்

ரவுடிகள் சரமாரி சுட்டதில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் பலி

உத்தரபிரேசம், கான்பூர் அருகில் இன்று அதிகாலை நெஞ்சைப் பிளக்கும் சம்பவம்

முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சி

கான்பூர், ஜூலை 3–

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி ஒருவனைக் கைது செய்ய போலீசார் சென்றபோது நடந்த மோதலில், ரவுடிகள் சுட்டதில், டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 போலீசார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் கான்பூர் அருகில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய விபரம் வருமாறு:–

கான்பூர் மாவட்டம், சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி திக்ரு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது கொலை, கொள்ளை என 60–-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் ரவுடி விகாஸ் துபே, சமீபத்தில் ஒருவரைக் கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் அவரைக் கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே கிராமத்தில் தங்கியிருப்பதாக அறிந்த போலீசார், அவரைக் கைது செய்வதற்காக நேற்று இரவு சென்றனர். டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், 5 காவலர்கள் எனப் பெரிய குழுவினர் சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த ரவுடிகள் ஜேசிபி யந்திரத்தை ரோட்டின் குறுக்கே நிறுத்தி போலீசாரின் வாகனங்கள் அந்தக் கிராமத்துக்குள் நுழைய முடியாதவகையில் தடையை ஏற்படுத்தினர். அதையும் தாண்டி போலீசார் கிராமத்துக்குள் சென்றபோது, ஒரு வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் பலர் போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலடி கொடுப்பதற்குள்…

ரவுடிகள் சுடுவதை போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. போலீசார் பதிலடி கொடுக்க முனைவதற்குள் ரவுடிகள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள் , 4 காவலர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 போலீசார் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக பக்கத்து மாவட்டமான கன்னூஜ் மாவட்டத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஆம்பலன்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ரவுடிகள் அனைவரும் தப்பிவிட்டதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டு மாடியிலிருந்து ரவுடிகள் பயன்படுத்திய குண்டுகள் இல்லாத துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில் துபேயின் ஆட்கள் 2 பேர் திக்ரு கிராமத்தில் போலீசாரால் கொல்லப்பட்டனர். தினேஷ் திவாரி என்பவனை (துபேயின் மைத்துனர்) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சியின் மாநிலா தலைவர் சந்தோஷ் சுக்லாவின் கொலையிலும் சம்பந்தப்பட்டவரன் துபே.

எல்லைகள் மூடல்

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக ரவுடிகள் கூட்டம் தப்பி ஓடி விடாமல் இருக்க 6 மாவட்ட எல்லைகளை போலீசார் சீலிட்டுள்ளனர்.

டிஜிபி பேட்டி

இதுகுறித்து உ.பி. போலீஸ் டிஜிபி ஹெச்.சி.அஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில்,

“ரவுடி துபேயைக் கைது செய்யும் நோக்கில்தான் போலீசார் சென்றனர். ஆனால், ரவுடி துபேயின் ஆட்கள் ஒரு மாடியின் மீது மறைந்திருந்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

போலீசார் அந்தக் கிராமத்துக்குள் நுழைய முடியாதவகையில் வழியெங்கும் தடுப்புகளையும், தடைகளையும் ரவுடிகள் உருவாக்கி இருந்தனர். அதையும் மீறி போலீசார் கிராமத்துக்குள் சென்றபோது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரவுடிகள் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்திருக்கும் என்பதை போலீசார் கருதவில்லை. ரவுடிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டிஜிபி தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு நடந்த திக்ரு கிராமத்துக்கு கான்பூர் கூடுதல் எஸ்.பி., கான்பூர் போலீஸ் ஐஜி, சட்டம் ஒழுங்கு டிஐஜி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆகியோர் விரைந்துள்ளனர். தடயவியல் துறையினர் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரவுடிகள் துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, காவல்நிலைய அதிகாரி மகேஷ் யாதவ், அனுப்குமார், உதவி ஆய்வாளர்கள் நெபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜிநே்திரா, பப்லு ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று உ.பி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அதிர்ச்சி

இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்த யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். முழுமையான அறிக்கை அளிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *