செய்திகள்

ரவீந்திரநாத் எம்பி தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு

டெல்லி, ஜூலை 11–

தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, 3 நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். மேலும் கடந்த வாரம் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் கேட்ட கேள்விகளுக்கு, சாட்சி கூண்டில் ஏறி ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் வி.அருண் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதிலளித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஓ.பி.ஆர் வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆதலால் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது என உத்தரவிட்டார். அதோடு, ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது எனவும் தீர்ப்பளித்தார்.

அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு ஓ.பி.ரவிந்திரநாத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒபி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என திமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *