செய்திகள்

ரம்ஜான் பண்டிகையையொட்டி 4 முதல் 9-ம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்

சென்னை, மார்ச் 30–-

ரம்ஜான் பண்டிகையையொட்டி 4–ம் வகுப்பு முதல் 9–-ம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்- 2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு (ஏப்ரல் 19-ந் தேதி) அதற்கு முன்னதாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி, சமீபத்தில் ஒரு அட்டவணையையும் வெளியிட்டது. அதில் வருகிற 2-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் அட்டவணை வெளியானது. இந்த நிலையில் அந்த அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றி அமைக்க எம்.எல்.ஏ.க்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22-ந் தேதிக்கும், 12-ந் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 23-ந் தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த அட்டவணையில் 12-ந் தேதிக்குள் தேர்வை முடித்து 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அட்டவணை மாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் கோடை விடுமுறை தொடர்பான தகவல் எதுவும் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘8-ந் தேதிக்கு பிறகு மாணவர்கள் 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும். இடைப்பட்ட நாட்களில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாலும். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ளதாலும் அது விடுமுறை கணக்கில் வந்துவிடும்’ என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *