செய்திகள்

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்

திருவாரூரில் அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்

திருவாரூர் ஏப் 17:

ரம்ஜான் நோன்புக் கஞ்சிக்கான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினையும் அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின், தற்போது கொரோனா நோய் பாதிப்பு நிலவி வருவதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் பள்ளிவாசல்களில் நேரடியாக கஞ்சி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனபோதிலும் இஸ்லாமிய மக்களின் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் சிறப்பினை உணர்ந்து நேரடியாக பள்ளிவாசல் ஜமாத்தார் வழியாக இஸ்லாமிய மக்களுக்கு கஞ்சிக்கு பதிலாக அரிசி வழங்குவது என்கின்ற திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 150 கிராம் வீதம் 30 நாட்களுக்கு தேவையான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 2,895 பள்ளிவாசல்களும் 5,480 மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்படும். இந்த அரிசி சம்பந்தப்பட்ட ஜமாத் நிர்வாகத்திற்கு உடனடியாக வழங்கப்படும். ஜமாத் பிரதிநிதிகள் இதனை பெற்றுக் கொண்டு ஏப்ரல் 22–ம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *