சிறுகதை

ரத்தம்..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்த மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

” அந்த வகை ரத்தம் கிடைப்பது கொஞ்சம் சிரமம் “என்று பேசிக் கொண்டார்கள் மருத்துவர்கள் எப்படியும் சில பல மருத்துவமனைகள் தேடினால் ரத்தம் கிடைத்துவிடும் ; எப்படியும் உயிரை காப்பாற்றி விடலாம்” என்று மருத்துவர்கள் எல்லா மருத்துவமனைகளுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

” டாக்டர் உசுருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே?” ரொம்ப பாசமான பையன் விட்டு போய்ட்டான்னா என்னால தாங்க முடியாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. காப்பாத்திருங்க “

என்று ராஜசேகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

” ஒன்னும் பயப்படாதீங்க எல்லா இடத்துக்கும் சொல்லி அனுப்பி இருக்கோம். கண்டிப்பா ரத்தம் கிடைச்சிடும் .நீங்க வருத்தப்படாம அங்க உக்காருங்க. உசுருக்கு ஒன்னும் ஆபத்தில்ல இல்லன்னா நாங்க அப்பவே எடுத்துட்டு போகச் சொல்லி இருப்போம். எங்களால காப்பாத்த முடியும். உங்களுக்கு கவல வேணாம்” என்று மருத்துவர்கள் உறுதி கூற ராஜசேகருக்கு சற்று நிம்மதி ஏற்பட்டிருந்தாலும் உட்கார மனம் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருந்தார் .அவரின் பதட்டம் அவர் நடந்து கொண்டிருக்கும் நடையிலேயே தெரிந்தது. மருத்துவரைப் பார்ப்பதும் அவசரச் சிகிச்சைப் பிரிவைப் பார்ப்பதுமாக இருந்தார். அவருக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது.

‘ என்ன ஒரு அன்பு ? என்ன ஒரு பாசம்? இப்படி ஒருவனை இழந்துவிட்டால் நாம் இனி இன்னொருவரை பெறுவது கடினம் எப்படியாவது பிழைத்துக் கொள்ள வேண்டும்? ” என்று மன்றாடிக் கொண்டிருந்தார் சிறிது நேரத்திற்கெல்லாம் ரத்தம் வரவழைக்கப்பட்டது. மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டார்கள் .அந்த நொடிகள் எல்லாம் ராஜசேகருக்கு பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது.

” என்ன சொல்ல போகிறார்களோ? ஏது சொல்லப் போகிறார்களோ என்று வருந்திக் கொண்டே இருந்தவருக்கு

” சார் உங்களுடைய நம்பிக்கை வீண் போகல. பொழைச்சிக்கிட்டான் போய் பாருங்க “

என்று சொல்ல ஆர்வமும் பதற்றமும் ஒருசேர பற்றிக்கொள்ள அவசரச் சிகிச்சை பிரிவிற்கு ஓடினார் .

“அங்கே பார்த்தவருக்கு சந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் பெருகியது.

” சார் உங்க நம்பிக்கை வீண் போகல சார் பொழைச்சுக்கிட்டான் என்றாள் ஒரு செவிலித்தாய்.

” டாமி … டாமி … நீ செத்துருவேன்னு நினைச்சுட்டு இருந்தேன் .ஆனா உசுரோடே வந்துட்டே ” என்று படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தன் செல்ல நாய்க்குட்டி டாமியை கட்டி அணைத்தார் ராஜசேகர் .அது தன் மொழியில் வாலாட்டியது.

” சார் தொடாதீங்க இன்னும் ட்ரீட்மெண்ட் இருக்கு. நீங்க ரொம்ப பதட்டமா இருக்கீங்கன்னு தான் உங்களுக்கு காட்டுணுனாேம் . இன்னும் ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டி இருக்கும். அதுக்கப்புறம் கூட்டிட்டு போங்க “

என்று மருத்துவர் சொல்ல

“சரி டாக்டர் நீங்க எவ்வளவு நாள் எடுக்கிறீர்களோ எடுத்துக்குங்க என் டாமி உசுரோட கிடைச்சதே பெரிய விஷயம். பாழாப் போன அந்த கார் வந்து ரோட்ல என் டாமி மேல மோதலன்னா டாமிக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. அவ்வளவு ரத்தம் பாேச்சு. டாமி பிழைக்காதுன்னு சந்தேகப்பட்டேன். அத உசுராேட திருப்பி கொடுத்துட்டீங்க .ரொம்ப நன்றி டாக்டர் “

என்று மருத்துவரின் கையைப் பிடித்து அழுதார் ராஜசேகர். அவர் உடைந்து அழும் குரலைக் கேட்டு படுக்கையில் படுத்திருந்த டாமி ஏன் நம் எஜமானர் அழுகிறார் என்று துள்ளி எழுந்தது.

” சார் கொஞ்சம் வெளியே போங்க. நீங்க அழுகுறீங்கன்னு உங்க டாமியும் அங்கே ஃபீல் பண்ணிட்டு படுக்கையை விட்டு எந்திரிக்கிது போங்க சார். உங்க டாமி எங்கேயும் போகாது “

என்று மருத்துவர் சொல்ல சந்தோசமும் மகிழ்ச்சியும் ஆறுதலும் ஒன்று சேர அந்த அவசரச் சிகிச்சைப் பிரிவை விட்டு வெளியேறினார் ராஜசேகர் அவர் போகும் திசையை பார்த்துக் கொண்டே இருந்தது டாமி

(ரத்தன் டாடா நினைவாக அவரின் வளர்ப்பு நாய் கொண்ட துயரம் கண்டு எழுதப்பட்டது இந்தச் சிறுகதை)

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *