சினிமா செய்திகள்

ரத்தம் தெறிக்கும்; ரத்தம் கொதிக்கும்!

சதக் …. சதக் …. சதக் …. சதக் ….

சதக் …. சதக் …. சதக் …. சதக் ….


விமர்சனம்- நான் மிருகமாய் மாற


கத்திக்குத்து, சரமாரியாக. எதிரிகளை கண்டந்துண்டமாக வெட்டும் காட்சிகள் (1 டஜனுக்கும் மேல் ஈவிரக்கமற்ற மிருக வெறி கொலை)

குபுக் ….குபுக் …. குபுக் …. குபுக் ….

குபுக் ….குபுக் ….குபுக் ….

பொங்கி வரும் ரத்தம் பீறிட்டுத் தெளிக்கும் ரத்தத் துளிகள் (ஒவ்வொரு கொலையிலும்).

சவுண்ட் என்ஜினியர் (Sound Engineer) சசிகுமார் மிருகமாய் மாற என்ன காரணம் என்பதைச் சொல்லும் ரத்த வெறி படம் : ‘நான் மிருகமாய் மாற…’

Blood Engineer என்று காட்டியிருக்கலாம் காரணம் சத்தத்தோடு அவர் இருக்கும் காட்சிகளை விட, ரத்தத்தோடு இருக்கும் காட்சிகளே அதிகம்.

சசிகுமார் சவுண்ட் என்ஜினீயர். மனைவி, தம்பி, தங்கை, மகள், அப்பா, அம்மா என்று ஆனந்தமான குடும்பம். அதிகாலை பூங்கா ஒன்றில் எதிரிகளின் பயங்கரத் தாக்குதலில் குற்றுயிரும் குலையுருமாக தப்பித்து, தன் மோட்டார் சைக்கிளில் வந்து ஏறி விடும் கோடீசுவரனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால், வந்தது ஆபத்து, சசிகுமாரின் தம்பிக்கு. அதன் எதிரொலி – சசிகுமாரின் குடும்பமே அநியாயமாக தீர்த்துக்கட்டப்படுகிறது.

கொலைகளின் பின்னணி யார்? அதைக் கண்டுபிடித்து பழிக்குப்பழி – ரத்தத்துக்கு ரத்தம் – கொலைக்குக் சொலை என்று அரிவாளைக் கையிலெடுத்து – ‘புழல் சிறை’ ரவுடிகள் – எதிரிகள் கூட்டத்தை தீர்த்துக் கட்டும் கதை தான், ‘நான் மிருகமாய் மாற…’ .

‘சவுண்ட் என்ஜினியர்’ என்ற கதாபாத்திரம் – புதுமை, இதுவரை யாரும் திரையில் ஏற்காதது.

தம்பியின் கொலைக்கு காரணமான 6 பேரை அரிவாள், உருட்டுக்கட்டை – இரும்புத் தடியால் மாறி மாறி அடித்து ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு விட்டு…

செய்த ‘பாவத்தை’ நினைத்து குளியலறையில் ஓ…வென்று சுவரைப் பிடித்து குமுறும் காட்சியில் மட்டுமே சசிகுமார் நிமிர்ந்திருக்கிறார், நடிப்பில்.

10 நாள் ரிகர்சல் பார்த்து அந்தக் காட்சியை ஒரே டேக்கில், இயக்குனர் ‘கழுகு’ சத்யசிவா எடுத்ததும், அதில் சகிகுமார் நடித்ததும்…. அந்த ரத்தம் கொட்டிய மன்னிக்கவும் … வியர்வை கொட்டிய உழைப்புக்கு ஒரு ஜே! ஸ்டண்ட்:மகேஷ் மாத்யூ மறக்க முடியுமா?!

பாடல் இல்லாத படம். இயற்கையான சத்தத்தை மட்டுமே ஒலிக்க விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஹரிப்ரியா – நாயகி, அழுவதற்காகவே காட்சிகள், நடிக்க.. ஊஹூம்.

கொட்டும் மழையிலும், கொட்டும் ரத்தத்திலும் ராஜா பட்டாச்சார்ஜியின் காமிரா ஓடியிருக்கிறது. படத்தொகுப்பாளர் : ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர்: டிடி ராஜா, டி.ஆர். சஞ்சய்குமார்.

காட்சிக்குக் காட்சி – சிகரெட் பிடிக்கும் காட்சிகள். நா கூசும் கெட்ட வார்த்தைகள் பச்சைபச்சையாய். அதை கண்ணியமான (நிஜத்தில்) சசிகுமார் பேசுவது எப்படி, ஜீரணிக்க முடியவில்லையே…?!

விக்ராந்த், நடிகர் விஜய்யின் சித்தி மகன். ‘பில்டப்’ எக்கச்சக்கம். திரைக்கதையில். தம் அடிக்கிறார், தண்ணி அடிக்கிறார், ‘டைட்’ க்ளோசப்பிலேயே முகம் காட்டுகிறார், செல்லிலேயே சசிகுமாரை மிரட்டுகிறார், மிரள வைக்கிறார். பெரிய அளவில் பேசப்படும் என்று பார்த்தால்…?! 138 நிமிடம் ஓடும் படத்தில் 90 நிமிடம் திரையில் ஓடும் ரத்தம், கொலைவெறித் தாக்குதலில் அலறலில் ஒலிக்கும் சத்தம்.

சசிகுமாரின்

‘நான் மிருகமாய் மாற…’:

திரையில் ரத்தம் தெறிக்கும்;

தரையில் ரத்தம் கொதிக்கும்!


– வீ.ராம்ஜீ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *