வாழ்வியல்

ரசாயன பொறியியல் வகுப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது கல்வி நிறுவனங்கள் எவை?

பொறியியல் துறை வளர்ச்சியடைந்து பல்வேறு துறைகளாக நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. அதில் முக்கிய துறையாக ரசாயன பொறியியல் துறை (கெமிக்கல் டெக்னாலஜி) வளர்ச்சிப் பெற்று வருகிறது. இத்துறையில் படிக்கும் மாணவர்கள் வேதியியல், தகவல்தொழில்நுட்பம், உலோக அறிவியல் (மெட்டீரியல் சயின்ஸ்) பொருளாதாரம், மேலாண்மை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் அடைகின்றனர்.

இத்துறையில் படித்தால் தொழிற்சாலைகளில் செயல்முறை பொறியாளர்கள் (பிராசஸ் என்ஜினியர்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் விஞ்ஞானிகள், நிர்வாக மேலாளர்கள் ஆகிய வேலைவாய்ப்புகளை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிலும் நல்ல ஊதியத்தில் பெற முடியும்.

பி.டெக், ரசாயனத் தொழில்நுட்பம் படிக்கும் போது படத்திட்டத்தில் உள்ள முக்கியப் பாடங்களுடன் சிறப்புப் பாடங்களான உரத்தொழில்நுட்பம், காகிதத் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், கழிவுநீர் சுத்திகரிப்பு, சுற்றுச்சூழல் பொறியியல், பசுமைப் பொறியியல், பாலிமர் தொழில்நுட்பம், மருந்துகம் மற்றும் மருந்தகத் தொழில்நுட்பம், தொழிற்சாலை மேலாண்மை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தாங்கள் விரும்பும் துறைகளில் நிபுணத்துவம் பெற்று எளிதாக வேலைவாய்ப்பை பெறலாம்.

அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், உணவு எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சர்க்கரை தொழிற்சாலைகள், ஆடைகளுக்கு வண்ணங்கள் ஏற்றுவதற்கான சாயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பெயின்ட் தொழிற்சாலைகள், உள்ளிட்டவற்றில் ரசாயனப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் நிறையவே காத்திருக்கின்றன.

ரசாயன பொறியாளர்கள் மற்ற துறை பொறியாளர்களைவிட 30% அதிக ஊதியம் பெறுவதாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக ஊதியம் பெறும் பொறியாளர்களாக ரசாயனப் பொறியியல் பட்டதாரிகள் விளங்குகின்றனர்.

பி.டெக் பட்டம் பெற்ற பின்னர் எம்.டெக் படிக்க விரும்புவோர் ரசாயனப் பொறியியலில் கணினிப் பயன்பாடு, செயல்முறை அமைப்புகள் மற்றும் வடிவமைப்பு, மேற்பரப்பு அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள், தொழிற்சாலை உயிரி தொழில்நுட்பம், உயிரி மருந்து தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சர்க்கரை தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழிற்சாலைகளில் தானியங்கி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வடிவமைத்து இயக்குவதற்கு MATLAB, CHEMMICAL ASPEN HYSYS, G PROMS ஆகிய மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ரசாயனப் பொறியாளர்கள் படிப்பதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை பெற முடியும்.

முனைவர் பட்டப்படிப்பு:

ரசாயன பொறியியலில் முனைவர் பட்டம் படித்தால் கல்லூரிகளில் பேராசிரியர் வேலைவாய்ப்பு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான விஞ்ஞானிகளாகவும் பணியாற்ற வாய்ப்புள்ளது.

அரசு வேலை வாய்ப்பு:–

மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ஆயில் நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி), பாரத் பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் பணியிடங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இப்படிப்புக்கு தொடக்கத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த படிப்புகள் உள்ள நிறுவனங்களைப் பற்றி அறிய பாருங்கள்

www.acs.org. www.topuniversities.com, www.iitchennai.com, www.nittrichy.com, www.srmuniv.ac.in, www.annauniv.ac.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *