ஓசூர், அக். 24–
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓசூர்- நந்திமங்கலம் சாலையில் தரைப்பாலம் ரசாயன கழிவு நுரையால் மூழ்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது. இதன் நீர் பிடிப்புப் பகுதியான கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,670 கன அடி நீர் வந்தது. இந்த நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் மழை மேலும் தீவிரமடைந்துள்ளதால், நேற்று இரவு அணைக்கு 2,623 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,220 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் இன்று காலை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஓசூர் – நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி தரைப்பாலதை தண்ணீரும், ரசாயன கழிவு நுரையும் மூழ்கடித்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவில்லை, மேலும், தட்டகானப்பள்ளி, நந்திமங்கலம் உள்ளிட்ட கிராமத்தினர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டி இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நுரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.