பெண்ணியம் பேசும் ; கண்ணியம் கூட்டம்; சுமன் + கீர்த்தி சுரேஷ் கூட்டணிக்கு ‘ஜிந்தாபாத்’!
கிரேசி மோகன் நகலாய் இரட்டையர்கள் ஆனந்த் + நவீன்
‘ரகு தாத்தா’: சுமன் குமார்+ கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் காமெடி கலாட்டா; “சங்கோஜமா” இருக்கு- இல்ல இல்ல, “சந்தோஷமா” இருக்கு; “பொறாமையா” இருக்கு- இல்ல இல்ல “பெருமையா” இருக்கு வாரே வாவ்… ஜாவ்ரே ஜா”
-” ரகு தாத்தா” படம் பார்த்துவிட்டுப் படித்தால் தான், இந்த விமர்சனம் புரியும், ரசிக்க முடியும். அப்படியானால் அதற்கு ஒரே வழி: படத்தைப் பார்த்து விடுங்கள்! (அச்சா பகுத் அச்சா!)
கிரேசி மோகன் ஸ்டைலில் சிச்சுவேஷன் காமெடி.
சிரிக்க வைக்கும் முழு நீள, சாரி அரை நீள காமெடி படம்.
சிரிக்க வைப்பதோடு நிற்காமல் சிந்திக்க வைக்கும்.
இன்றைய ‘டீன் ஏஜ்’களுக்கான பெண்ணியம் பேசும்.
கிரேசி மோகன் ஸ்டைலிலா யாரது…? என்று ஒரு கேள்வி ‘சட்’ என்று எழும். அதற்கு பதில் தரும் இடத்தில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஆனந்த். இன்னொருவர் நவீன் குமார். இவர் பொறியியல் துறையில் சாதித்து வந்தவர். தன் திறமை மீது நம்பிக்கையுடன் ஸ்டாண்ட் அப் காமெடி விருந்தை படைத்தார். அதன் எதிரொலி வெள்ளித்திரை பட வாய்ப்பு. ரகு தாத்தா வில் உதவி வசனகர்த்தாவாக அறிமுகம்.
பெங்களூரில் வாசம். துடிப்பான இளைஞர். ரோட்டரி, லயன்ஸ் பல்வேறு கிளப்புகள், பொது மேடை என்று ஸ்டேடிடப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியவர். யூடியூபில் பிரபலமானவர். ஒட்டு மொத்தமாக 80 லட்சம் கடந்து ரசிகர்களை தன் பக்கம் வளைத்து.
போட்டிருப்பவர்.
தான் சிரிக்காமல் அருவி போல் கொட்டும் ஆங்கில பேச்சில் காமெடியைச் சொல்லி சிரிக்க வைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதில் இந்த நவீன் குமார்- நந்தகுமார்!
கே ஜி எஃப், காந்தாரா ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்த ஹோம் பாலே நிறுவனத்தின் தயாரிப்பு, முதல் முறையாக நேரடி தமிழ் படம்: ரகு தாத்தா.
ரகு தாத்தா என்று சொன்னதும் கே. பாக்யராஜின் “இன்று போய் நாளை வா” படத்தில் வரும் “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா…” காமெடி தான் நினைவுக்கு வரும். அதில் வரும் ரகு தாத்தாவைத் தான் தலைப்பாக்கி இயக்கி இருக்கிறார் சுமன் குமார். (இவர் ஒரு எழுத்தாளர். நகைச்சுவையாக எழுதுவதில் பிரியம். மானசீக குரு தமிழில் கிரேசி மோகன், தெலுங்கில் இயக்குனர் ஜந்தியாலா. இருவரின் தாக்கத்தில் இவரும் காமெடிக்கு பேனா பிடித்திருக்கிறார்.
வங்கிக் கிளையின் அதிகாரி குப்தா, சுரேஷ் கீர்த்தியுடன் உரையாடும் காட்சி. இந்திக்காரராக இருந்தாலும் தமிழை தப்பு தப்பாக பேசுபவர்.( சங்கோஜம் -சந்தோஷம்,பொறாமை பெருமை). சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பேச்சுக் கொடுக்கும் சுரேஷ் கீர்த்தியிடம்,“நகி நகி…” என்று ஹிந்தியில் சொல்ல, அதற்கு சுரேஷ் கீர்த்தி “நெய் நெய் கொண்டு வரணுமா… ”என்று கேட்பது…
பிரமோஷனுக்காக இந்தித் தேர்வு எழுதும் தனி அறையில் ஒருவன் வினாத்தாளின் உச்சியில் பிள்ளையார் சுழி போட, அதை பார்க்கும் தேர்வு அதிகாரி தெலுங்குக்காரர், (தலைகாட்டியிருப்பவர்: சுமன்குமார்) “இந்தி எக்ஸாமுக்கு தமிழிலே பிள்ளையார் சுழியா?…” என்று தெலுங்கு + தமிழ் இரண்டின் கலவையில் கேட்பது…
–இப்படி 13 இடங்களில் ‘சிச்சுவேஷன்’ காமெடி. இது, கிரேசி ஸ்டைல் :தியேட்டரே சிரிக்கும்!
கயல்விழி பாண்டியனின் அறிமுகம், பின் காதலன், அடுத்த கட்டம் கணவனாக வரவேண்டியவர்- விதியின் விபரீத விளையாட்டு- சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போல, தான் எழுதிப் போட்ட மொட்டை கடுதாசி. கயல் விழியால் நிராகரிக்கப்படும் நிர்பந்தம் – ஐயோ பாவம் என்ஜினியர்:: அந்த மொச்சைக் கொட்டை கண்ணும், தூக்கி வாரிய சுருட்டை முடியும், அவனது மனசுக்குள் ஒளிந்திருக்கும் வில்லத்தனம் கலந்த குணாதிசயமும், எதார்த்த நடிப்பும் – நடையும்… எண்பதுகளின் நாயகன் கண்ணில் தெரிகிறார் ரவீந்திர விஜய். குணச்சித்திரம் கொப்பளிக்கிறது. தமிழுக்கு ஒரு அருமையான குணச்சித்திர நடிகர்: ரகு தாத்தா மூலம். வாரி அணைக்கலாம், வார்ரே வா!
“ஆண் ஆதிக்கம் கூடாது என்று பெண்ணியம் பேசும் நாயகியின் கதை.
‘‘இந்தியும் ஒரு மொழி, கற்பதும் கற்காததும் அவரவர் இஷ்டம். திணிக்கக் கூடாது” (இந்தி யை எதிர்க்கவில்லை உன்னிப்பாகக் கவனிக்கவும்) – என்று இரண்டே வாக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை.134.59 நிமிடத்திற்கு( அதாவது ரெண்டே கால் மணி நேரம்) ரகு தாத்தாவை திரையில் ஓட விட்டிருக்கிறார்கள் சுமன் குமார் அண்ட் கோ.
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்திருக்கிறார்கள், குறிப்பாக பெண் வர்க்கம் சிரிக்க சிந்திக்க.
கீர்த்தி சுரேஷின் தோள்களில் 60% சுமையை ஏற்றி வைத்திருக்கிறார்கள். கீர்த்”தீ” – வாயை திறந்தால் வெளிவரும் வார்த்தைகள் சுட்டெரிக்கும் விதத்தில். ரகு தாத்தாவுக்கு இவர் வலிமையான சுமை தாங்கி தான்! நடிப்பில் சுடர். மேனகா தாய் பெருமையில் நடக்கலாம் இதிலும் மகாநதி மவுசில்.
‘இரும்பு மனுஷி’ இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் பீரியட் பிலிம் ரகு தாத்தா. அதற்காக தமிழ் -இங்கிலீஷ்- இந்தி பத்திரிகைகளில அன்றைய தலைப்புச் செய்திகளை டைட்டிலில் காட்டி இருக்கும் முயற்சி- பகீரதப்பிரயத்தனம். சுமன் குமார் கூட்டணியின் மெனக்கடலுக்கு ஒரு ‘ஜே’ போடலாம். (பகுத் முஷ்கில் காம் ஹை)
க பா (கயல் பாண்டியன் என்பதன் சுருக்கம்) எழுதுவது பெண் தான் என்று மொட்டை கடிதாசு வங்கி அலுவலகத்துக்கு வந்ததும் பூவுக்குள் பூகம்பமாய் – கீர்த்தி சுரேஷ்.
காதலனின் வீட்டுக்குள் நுழைந்து, வருங்கால மாமியாரின் அனுமதியைப் பெற்று அவனது டைரியை படிக்க அதிர்ச்சி. அதில் அவரது சுயரூபம் தெரிகிறது. அந்நேரம் கீர்த்தி–பூ ஒன்று புயலான வேதம்.
டைரி வாசகங்களை படிக்கப் படிக்க அதில் காதலனது முகத்தை ‘சூப்பர் இம்போஸ்’ செய்து, அங்கே அவனது குரலை பதிவு செய்திருப்பதில்… இயக்குனர் சிகரம் கே பாலச்சந்திரன் உத்தி, அங்கே தெரிகிறது சுமன் குமாரின் புத்தி, சபாஷ்!
ஒரு ஃ பிரேமில் தலை காட்ட வந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தில் முழுக்க தலை காட்டினாலும- எம் எஸ் பாஸ்கர் முத்திரை நடிப்பில் முகத்தை திரையில் காட்டும் திறமைசாலி. தாத்தாவுக்கு அவர் நம்பிக்கை நட்சத்திரம்.
“நீ கல்யாணம் பண்ணிக்காவிட்டால்.. தூக்கில் தொங்குவேன், விஷம் குடிப்பேன்” என்று மகளை மிரட்டும் தந்தை ஜெயக்குமார் (குமார ராணி மீனா முத்தையாவின் செட்டிநாடு பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் அரங்கேற்றம் நாடகங்களுக்கு பயிற்சியாளர்),
தமிழை தப்புத் தப்பாய் பேசும் குப்தா (யாரது?) 500 ரூபாய் கொடுத்தால் கூலிப்படையை வேலைக்கு வைத்து விடலாம்… என்று சொல்லும் அண்ணி, எக்கு தப்பான யோசனைகளை சொல்லும் க பா வின் (கீர்த்தி சுரேஷ்) வங்கித் தோழி தேவதர்ஷினி, வள்ளுவன்பேட்டை சபாவை திறப்பதற்காக நடை யாய் நடக்கும்- (காதில் கடுக்கன் தலையில் குல்லா தொப்பி) பெரியவர் ஆனந்த் சாமி, ரகு தாத்தாவுக்கு கேன்சர் என்று பயமுறுத்தி கிளைமாக்ஸ்ல் சஸ்பென்சை உடைக்க வரும் குண்டு டாக்டர், இவர்கள் 8 பேரும் தாத்தாவுக்கு முட்டு கொடுத்து இருக்கிறார்கள். தேவதர்ஷினி தவிர மற்றவர்கள் நமக்குப் புதியவர்கள். (ஆதிரா, மனோஜ் குமார், கலைவாணன், ஜானகி, மிப்பு, ராஜேஷ் பாலச்சந்திரன்- டைட்டிலில் ஓடும் பெயர்கள்)
யாமினி யக்ன மூர்த்தி – பெண் ஒளிப்பதிவாளர். இசை ஷான் ரோல்டன். நாகர்கோவிலில் காமிரா அருமை. கதாபாத்திரங்களின் ‘மடுக்கான’ லைட்டிங், சூப்பர். பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் , அதன் வரிகள் வித்தியாசமான கற்பனை. உன்னிப்பாக கவனித்தால் ‘களுக்கென்று’ சிரிக்கலாம். (மண்டைலே தேங்கா போடு…) கதை ஓட்டத்திற்கு பொருத்தமான வரிகள். யார் அந்தக் கவிஞர்?!
பீரியட் ஃபிலிம். இதில் ஆர்ட் டைரக்டர் பாராட்டப்பட வேண்டியவர், அருமை.
“பெரிய தப்ப சரி செய்ய சின்ன தப்ப செஞ்சா தப்பே இல்லை…” கிரேசி ஸ்டைல் டயலாக். இரட்டையர்களின் ( நவீன் குமார்- ஆனந்த்) மை, மனசில் ஒட்டுகிறது.
கிளைமேக்ஸ்- க பா தோழி, கூலிப்படை அண்ணி சதி ஆலோசானை மாப்பிள்ளை கடத்தல்- முகூர்த்த நேரம் தள்ளிப் போகுதல்- ரகு தாத்தா கேன்சர் இல்லை என்ற மெடிக்கல் ரிப்போர்ட்- இப்படி அடுத்தடுத்து சம்பவக் கோர்வைகளின் முடிவில்-
அந்த எதிர்பாராத முடிவு, எதிர்பார்த்தது என்றாலும், எதிர்பாராதது என்பதுதான் எதிர்பார்த்தது! (சமஜ் நஹி… ‘க்யா கரேகா…?!)
பெண்ணியம் பேசும் நாயகி, பெரியார் கொள்கை பிடிப்பு நாயகி கீர்த்தி சுரேஷ். திரையில் அவரின் வாய் மொழி மெசேஜ். இன்றைய காலகட்டத்தில் தாய்க் குலம் வரவேற்கும். வரவேற்க வேண்டும். வரவேற்பார்கள். வாரி அணைப்பார்கள் கீர்த்தியை
ஆரம்பத்தில் இருந்து 40 நிமிடம் நாடகம் மாதிரி நகரும் காட்சிகள், அது தாத்தாவின் நடை- ஆமை வேகம். இடைவேளை கழிந்து 30வது நிமிடத்திற்கு பின் அது இளைஞனின் துள்ளல் ,முயல் வேகம்!
சுமன் குமார்+ கீர்த்தி சுரேஷ்
கூட்டணி காமெடி கலாட்டா
ரகு தாத்தா:
பொழுது (ம்) போகும்;
ஜாவ் ரே ஜா, போய்யா போ!
வீ. ராம்ஜீ