சுற்றிலும் காடு. வான் முட்ட நீண்டு வளர்ந்த மரங்கள். வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு. அங்கு வளர்ந்து நின்ற மரங்களில் எல்லாம், பெயர் சொல்லி அழைக்க முடியாத எத்தனையோ பறவைகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் கோயிலுக்கு போய் வந்தால், எல்லாப் பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்கின்ற நம்பிக்கை. இது எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பத்மநாபன் கோயிலின் பெருமைகள். கோயிலைச் சுற்றி உள்ள பிரகாரங்களின் கல்வெட்டுகளில் , கோயிலின் கீழே ரகசிய அறைகள் இருப்பதாகவும் அந்த ரகசிய அறைகளில் வைரம், வைடூரியம் ,தங்கம் ,பொன் என்று புதையல் இருப்பதாகவும் கல்வெட்டுகள் சான்றுகள் கூறின.
கோயில் தர்ம கர்த்தா சடையப்பனுக்கு அந்த ரகசிய அறைகளில், அப்படி என்னதான் இருக்கிறது? கல்வெட்டுகளில் இருப்பதெல்லாம் உண்மையாக இருக்குமோ ? என்று கல்வெட்டு எழுத்துக்களைப் படித்துச் சொல்லும் நபர்களை எல்லாம் அழைத்து வந்து, அவர்கள் கேட்டதற்கு மேல் பணமும் கொடுத்து அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டான் . கல்வெட்டு எழுத்துக்களைப் படித்து சொன்னவர்கள் எல்லாம் உண்மையாகவே பத்மநாபன் கோயிலில் ரகசிய அறைகள் இருக்கின்றன. அந்த ரகசிய அறைகளுக்குள் மதிப்பிட முடியாத வைரம், வைடூரியப் புதையல் இருக்கின்றன. அந்தப் புதையலைப் பாதுகாப்பதற்கு ஐம்பதடி நீளமுள்ள ஒரு ராஜ சர்ப்பமும் இருக்கிறது – இப்படி கல்வெட்டு எழுத்துக்கள் சொல்லுகின்றன ” என்று வாய் வார்த்தைகளை மட்டுமே சொல்லிவிட்டு சடையப்பன் வாரி வழங்கிய பொருட்களையும் பணத்தையும் வாங்கிச் சென்றார்கள்.
அந்த ரகசிய அறைகளைத் திறந்து பார்ப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிப்பதில்லை. கோயில் நிர்வாகமும் இதற்குச் சம்மதிக்காது. புதையல் இருக்கும் ரகசிய அறை சரியாக பத்மநாபன் வீற்றிருக்கும் கர்ப்பகிரகத்திற்கு கீழே தான் இருக்கிறது என்று கல்வெட்டு எழுத்துகளை வாசித்தவர்கள், சொன்னதைக் கேட்ட சடையப்பன் அடிக்கடி கருவறைக்குள் நுழைந்து ரகசிய அறையின் வாசல் எங்கே இருக்கிறது என்று நோட்டமிட்டான்.
விதவிதமான அபிசேகங்கள் செய்த கர்ப்பகிரகத்திலிருந்து ஒரு விதமான வாசனை மட்டுமே வந்துகொண்டிருந்தது. ரகசிய அறையின் வாசலை அவ்வளவு சாதாரணமாகச் சடையப்பனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எப்படியும் அந்த ரகசிய அறையில் இருக்கும் புதையலை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான நாள் குறித்தான் சடையப்பன் .
முழுவதும் இருள் கவிழ்ந்து கருமையாக இருக்கும் ஒரு அமாவாசை இரவு, பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். சடையப்பன். கர்ப்பகிரகத்திற்குள் அமர்ந்து பாலாபிசேகம், நெய்யபிசேகம் செய்தனர் பூசாரிகள்.
அபிசேகங்கள் செய்யும் போது அவன் கண்கள் பத்மநாபன் மீது இல்லை. கர்ப்பக்கிரகத்தின் ரகசிய வாசல் எங்கே இருக்கிறது? என்பதைக் கவனிப்பதிலேயே சடையப்பன் கவனம் முழுவதும் நிரம்பியிருந்தது .அத்தனை அபிசேகங்களையும் முடித்த பூசாரிகள்,
“எல்லாம் முடிஞ்சது; கிளம்பலாமா? என்று சடையப்பனிடம் கேட்க
“இல்ல நான் இன்னைக்கு ராத்திரி இந்தக் கர்ப்பகிரகத்தில தான் தூங்கணும்.அதுதான் கடவுள் இட்ட கட்டளை” என்று சடையப்பன் சொல்ல
“சரி.சடையப்பன் கோயில் தர்மகர்த்தா. அவர் சொல்வதை நாம் தட்ட முடியாது” என்று பூசாரிகள் எல்லாம் விடை பெற்றார்கள்.
கோயில் நடை கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டன. எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரிகள் எல்லாம் , எண்ணைக்குள் விழுந்து மடிந்தன. அத்தனை மௌனத்திலிருந்தது பத்மநாபன் கோயில்.
சடையப்பனுடன் வந்த பணியாளர்கள் எல்லாம் பிரகாரங்களில் படுத்தார்கள்.
சடையப்பன் மட்டும் தூங்குவது போல நடையைச் சாத்திவிட்டு கர்ப்ப கிரகத்திற்குள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.
காற்று கூட நுழைய முடியாத அந்தக் கர்ப்பகிரகத்திற்குள் தன் இரு கண்களையும் அகலத் திறந்து உற்று உற்றுப் பார்த்தான்.
இருளின் கண்களில் எதுவுமே தெரியவில்லை.கீழே குனிந்து படுத்து, நிமிர்ந்து என்று வித்தைகள் காட்டினான். பத்மநாபன் சிலைக்குக் கீழே சின்னதாக ஒரு குழி தெரிந்தது. அந்தக் குழியின் வழியாக தன் கையிலிருந்த செல்போன் வெளிச்சத்தைப் பரப்பிப் பார்த்தான். ஆனால் அந்தக் கல்லை நகர்த்தி அந்தக் குழியைத் திறந்து பார்க்க அவனால் முடியவில்லை.பிரகாரங்களில் படுத்திருந்த பணியாளர்களை எழுப்பினான்.
“வாங்க … வாங்க ” என்று அவன் கூப்பிட அடித்துப் பிடித்து எழுந்த பணியாளர்கள்,சடையப்பன் பின்னால் நடந்தார்கள். எங்கிருந்தோ டமால் என்று சத்தம் கேட்க, பதறியடித்த பணியாளர்கள், சத்தம் வரும் திசை நோக்கித் திரும்பினார்கள்.
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கு யாரும் தொடாமலே கீழே விழுந்து சர்… சர் என்று ஆடிக் கொண்டிருந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத சடையப்பன் போகலாம் என்று தன் புருவத்தை உயர்த்தி கர்ப்பகிரகத்திற்குள் போக சொன்னான்.
தீப ஒளியில் வீற்றிருந்த பத்மநாபன் சிலையை மெல்ல நகர்த்தினார்கள் பணியாளர்கள். விர் என்ற ஏதோ ஒரு அமானுசிய சத்தம் கேட்டது.
என்னவென்று அவர்கள் திரும்பி பார்த்தபோது ….
மேலே இருந்து ஒரு சர்ப்பம் இவர்களை நோக்கி வந்தது. ஐயோ என்று பயந்து ஓடிய பணியாளர்களைப் பிடித்து நிறுத்தினான், இதெல்லாம் சாதாரணம். இதுக்கே பயந்தா எப்படி ? என்று ஓடி வந்த சர்ப்பத்தை தன் கையால் பிடித்து, அதன் கழுத்தைத் திருகித் தூக்கி வீசினான். தூர விழுந்த சர்ப்பம் மூச்சு வாங்கியபடியே தரைக் கற்களில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது.
” அடுத்து போகலாம்” என்று சடையப்பன் சொல்ல
பத்மநாபன் சிலையை மெல்ல நகர்த்தினார்கள், பணியாளர்கள்.
அதன் கீழே சின்னதாக ஒரு குழி தெரிந்தது. அதன் வழியாக தங்கள் கைகளில் இருந்த செல்போன் வெளிச்சத்தை குழிக்குள் வீசி பார்த்தார்கள். அந்தக் குழி எங்கே முடிகிறது? என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சுற்றிலும் கற்கள் பூசப்பட்ட அந்த பெருங் குகைக்குள் உஷ் என்ற சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன பணியாளர்கள் .அந்தக் குகை வழியாக மெல்ல நுழைந்தார்கள்.
“ஐயா ,இந்த குகைக்குள்ளே என்னமோ இருக்கு .வேண்டாம் போயிரலாம். பயமா இருக்கு ” என்று அவர்கள் சொல்வதற்குள் குபு குபுவென அந்தக் குகைக்குள் இருந்து கரும்புகை வந்தது.
” ஐயோ… ஐயோ …. என்று கதறிய பணியாளர்கள் அந்த குகையை விட்டு ஓட முயற்சித்தார்கள். அதற்கும் பயப்படாத சடையப்பன் பயப்படாதீங்கள் என்று சொல்லி அடுத்த அடியை எடுத்து வைக்கச்சொன்னான்.
அதுவரை அமைதியாய் இருந்த கோயில் மணி, தன் நாவை அசைத்து, டங் … டங்… டங்… என்று அடித்தது.
நிச்சயமாக இந்த மணியின் ஓசை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு கேட்டிருக்கும். யார் இந்த நேரம் கோயிலுக்குள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வரும் ” என்று நினைத்த சடையப்பன் குகைக்குள் இருந்து அடித்துப் பிடித்து ஓடி, ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டிருந்த மணியின் நாவைப் பிடித்துத் தொங்கினான். அந்த மணியின் ஓசை நிற்கவேயில்லை மணியின் நாவோடு சடையப்பனும் அங்குமிங்கும் அசைந்து கொண்டு இருந்தான்
“என்ன இது ?இவ்வளவு பிரச்சினையா இருக்கு. எத்தனை பிரச்சனை வந்தாலும் நான் விடமாட்டேன். எப்படியும் இந்த ரகசிய அறைக்குள் என்ன இருக்குன்னு பார்க்காம விடமாட்டேன்” என்று நினைத்த சடையப்பன் மணியை நிறுத்தி விட்டு மறுபடியும் குகைக்குள் நுழைந்தான்.
” ஐயா ரொம்ப பயமா இருக்கு.வெளியே போய் விடலாமா? என்று சொல்ல
ஏண்டா முட்டாப் பயலுகளா,இந்த ரகசிய அறையில கோடிக்கணக்கான வைரமும் வைடூரியமும் புதையலும் இருக்கிறதா கல்வெட்ட படிச்சு பாத்து நிறைய பேர் சொல்லி இருக்காங்க.
அந்தப் புதையல எடுக்காம போகக்கூடாது என்று சடையப்பன் சொல்ல , அடுத்த அடி எடுத்து வைத்த போது அங்கு கல் ஒன்று தென்பட்டது. அந்தப் பெருங் கல்லைப் புரட்டி அப்புறப்படுத்துவதற்குள் அவர்களுக்கு பெரும் பாடாய் இருந்தது கல்லைப் புரட்டியதும் அதற்குள் இருந்த ஐம்பதடிச் சர்ப்பம் இவர்களைப் பார்த்து மேலே வராமல், கீழ்நோக்கி சென்றது. சர் என்று அது போன வேகம் எங்கே போய் நின்றது என்பது தெரியாத அளவுக்கு ஆழம் அதிகமாக இருந்தது.
” ஐயா இதில இறங்கவா, ரொம்ப பயமா இருக்கு ” என்று பணியாளர்கள் சொன்னபோது
” இறங்குங்க இந்த ரகசிய அறைக்குள்ள பெரிய புதையல்,இன்னும் என்னென்னமோ இருக்குன்னு சொல்றாங்க. அந்த புதையலை நாம் எடுத்துட்டோம்னா தலைமுறை தலைமுறைக்கு எந்தக் கஷ்டமும் இல்லாம வாழ்ந்திடலாம். போங்க என்று பணியாளர்களை முடுக்கினான் சடையப்பன்.
அந்தக் குகைக்குழி வழியாக ஏதோ ஒரு கல் உருண்டு புரண்டு ஓடி விழுந்தது. அது கீழே விழுந்த சத்தம் சட் எனக் கேட்கவில்லை. சடையப்பன் மேலே இருந்து
என்ன? என்பது போல் கேட்டான்
” கல்லு ” என்று பணியாளர்கள் சொல்ல
“சரி கீழ இறங்குங்க ” என்று சடையப்பன் கட்டளையிட, மெல்ல மெல்ல குகைக்குள் நுழைந்தார்கள். எப்படியும் புதையல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை சடையப்பனுக்கு மிகுந்திருந்தது .கோடிக்கணக்கில் ஏன் மதிக்க முடியாத அளவில் இருக்கும் புதையல் இப்போது நமக்குக் கிடைக்கப் போகிறது. அதன் பின்னால், இந்த உலகத்தையே நாம் விலைக்கு வாங்கி விடலாம்” என்ற பேராசை சடையப்பனுக்குள் சங்கமித்திருந்தது.
மெல்ல மெல்ல குகைக்குள் நுழைந்ததும் பட… பட… வென சிறகடித்து பறந்து ஓடின வவ்வால்கள். கீச்… கீச் … என்று பறந்து கொண்டிருந்தன, பெயர் சொல்ல முடியாத பறவைகள்
ஓம் என்ற பிரணவ மந்திரம் போல் ஒரு சத்தம் அந்த குகை முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. பயந்து நடுங்கிய பணியாளர்கள் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தார்கள். சடையப்பன் பின்னாலேயே சென்றான்.
“என்ன இங்க ஏதோ தெரியுதே?” என்று கேட்டான் சடையப்பன்
” எதுவுமே தெரியல ஐயா” என்று பணியாளர்கள் சொல்ல,
கும்மிருட்டுக் குகைக்குள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தார்கள்.
சர்…. சர்… என்று சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம்? இந்த குகைக்குள் நடந்து செல்ல வேண்டும். அந்த ரகசிய அறை எங்கிருக்கிறது? வைரம் வைடூரியப் புதையலை நாம் எப்போது பார்க்கப் போகிறோம்?.என்ற பேராசை மிகுதியில் குகைக்குள் சென்று கொண்டிருந்தான் சடையப்பன்
இருட்டு பூச்சிகளின் சத்தம், அவர்கள் காதுகளை நிறைந்தது. மெல்ல மெல்ல அடி எடுத்து நடந்தார்கள்.தொடும் தூரத்தில் ஏதோ மின்னுவது தெரிந்தது
” ஆ…. நாம நினைச்ச அந்தப் புதையல் கிடைச்சிருச்சு
போல ” என்று நினைத்த சடையப்பன் பணியாளர்களைத் துரத்தி விட்டு ஓடிப்போய் பளபளக்கும் அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தான்.அவன் தொட்டுப் பார்த்தபோது வைரக் கலரில் இருந்த ஒரு காகிதத்தில் ஏதோ ஒன்று எழுதியிருந்தது.பழைய தமிழில் எழுதி இருந்த எழுத்துக்களை எல்லாம் ஒன்று கூட்டிப் படித்துப் பார்த்த போது, இந்த ரகசிய அறை, எதுவுமற்ற ரகசிய அறை .இந்த அறையில் போர்களைப் பற்றி, எதிரிகளை எதிர்கொள்வது பற்றிய ரகசியங்களைப் பற்றிப் பேசும் ரகசிய அறை.
அரசர்கள் பேசும் இந்த ரகசியங்கள் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த ரகசிய அறை.இந்த ரகசிய அறையில் எதுவும் இல்லை” என்று எழுதி இருந்ததை வாசித்த சடையப்பன்
” ஐயோ மோசம் போயிட்டேனே” எவனோ கல்வெட்டுல புதையல் இருக்குன்னு சொல்லி, நம்மளஇவ்வளவு வேலை செய்ய வச்சிட்டானே” என்று சடையப்பன் அழுதான்.அதற்கு மேல் செல்ல முடியாத அந்த குகை கற்களால் மூடப்பட்டிருந்தது.
இனியும் இதற்கு மேல் செல்வது பிரயோஜனம் இல்லை என்று நினைத்த சடையப்பனும் பணியாளர்களும் குகையிலிருந்து வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.முதலில் திறந்து இருந்த அந்தக் குகையின் வாசல் கதவு டமால் என்ற அடைத்தது. பெரும் கற்கள் விழ ஆரம்பித்தன. வெளியேற முடியாமல் மூச்சு முட்டி உயிரற்று நின்றார்கள் சடையப்பனும் பணியாளர்களும் . ரகசிய அறை ரகசியமாய் மூடப்பட்டது.
#சிறுகதை