செந்தில் ஊருக்கு வந்ததிலிருந்து தன் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இருந்தான். தனது கல்லூரிப் படிப்பை தட்டுத் தடுமாறி முடித்து விட்டு அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்வதென முடிவடுத்ததைக் கண்டு அவனது அப்பா மிகவும் ஆனந்தமடைந்தார்.
வந்த நாள் முதல் விவசாய நிலங்கனைச் சுற்றிப் பார்த்த அவன் சற்று தள்ளி காலம் காலமாக வளர்ந்து வரும் மரங்கள். பழச்செடிகள். கொடிகள். காய்கறிச் செடிகள் என அந்த இடமே பசுமை பூத்து ஜொலித்தது கண்டு செந்தில் அப்பாவிடம் எவ்வளவு வருமானம் வருகிறது இந்த தோட்டத்தால் என்றதும் அவர் இதில் விளைபவை வியாபாரத்திற்கல்ல, நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் மற்றும் நம்மிடம் வேலை பார்க்கும் நம் சொந்தங்களுக்கும் தான் என்றார். இதைக் கேட்ட செந்தில் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் ஒரு யோசனையில் ஆழ்ந்தான்.
வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நமக்கு எவ்வளவு நிலம் உள்ளது. அதில் ஆற்றுப்பாசனம் பெறும் நிலம் எவ்வளவு; கிணற்றுப் பாசனம் பெறும் நிலம் எவ்வளவு; மானாவாரி நிலம் எவ்வளவு என்று கேட்டான்.
அப்பா விவரங்களை கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என மடமடவென்று சொன்னார்.
தேனடையிலிருந்து தானாக சொட்டும் தேனை அண்ணாந்து பார்ப்பது போன்று செந்தில் நிமிர்ந்து அப்பா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நாம் இந்த சொத்துக்கு ஐந்தாவது தலைமுறை என்றார்.
மனதிற்குள் சில திட்டங்கள் வகுத்த செந்தில் மறுநாள் தோட்டத்திற்கு மரம் வெட்டுபவனை அழைத்துச் சென்று அங்குள்ள மரங்களைக் காண்பித்தான். அவைகள் ஒவ்வொன்றையும் நன்றாகப் பார்த்த மரம் வெட்டுபவன், ஐயா, எல்லாம் நன்கு முத்திய மரங்கள். இன்னும் குறைந்தது பத்து வருடங்கள் நிலைத்து நிற்கும். இப்போது வெட்டினால் வீடு கட்டுபவர்களுக்கு நிலைக்கதவு, கதவுகள், மரப் பொருட்கள் செய்ய ஏதுவாக இருக்கமெனவும் இன்னும் பத்து வருஷம் சென்றால் தேக்குக்கு இணையாக உறுதியாக சொல்லுமளவுக்கு இருக்குமென்றான். ஒரு வளைவு இல்லாமல் செங்குத்தாக நீளமாக இருப்பதால் இந்த மரங்களுக்கு எப்பவுமே நல்ல விலை கிடைக்கும் என்றான் மரம் வெட்டுபவன். மனதிற்குள் பெரிய மகிழ்ச்சியடைந்த செந்தில், சரி அடுத்து நான் சொன்ன பிறகு வாருங்கள் என்றான்.
இதற்குப்பின் செந்தில் பழைய நண்பர்களுடன் சேர்ந்து மதிய வேளையில் சீட்டு விளையாட ஆரம்பித்தான். வீட்டிற்கு இரவு நேரமாக வருவதை வழக்கமாக்கிக் கொண்ட செந்திலை ஒரு நாள், அவன் அம்மா ஏன் இப்பிடி செய்கிறாய்? நல்ல வாழ்க்கை வாழுவதை ஒழித்து விடாதே என்றார். சிறு வயது முதலே குடிப்பவனைக் கண்டால் வெறுக்கும் செந்தில் அந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தப்பினான் என்பதில் ஒரு நிம்மதி செந்தில் அம்மாவுக்கு .
தோட்டத்திற்கு நான்கு ஐந்து ஆட்களுடன் மரம் வெட்டுபவர்கள் தேவையான உபகரணங்களுடன் வந்து அங்கிருந்த எல்லா மரங்களையும் வெட்டினார்கள். நல்ல தேவையான சாமான்கள் செய்வதற்கு ஏதுவாக மரங்களை வெட்டினார்கள். வெட்டும் போது அவ்வப்போது மரம் வெட்டுபவன் நல்ல சூப்பர் மரம் ஐயா என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். அடித்தூர் வெட்டும் போது சிலர் வந்து தனியாக பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக கூறி விலை பேசி சென்றனர். நல்ல உறுதியாக வாங்குவோர் தேவைக்கு ஏற்ற மாதிரி இருந்ததே நல்ல விலைக்குக் காரணம் என்றான் மரம் வெட்டுபவன். அதன் பின் இருந்த வேர்களை அகற்றி அவற்றை ஒரு கயிறு போல் செய்து பயிர்களுக்கு பந்தல் கட்ட உதவும் என்றான். அப்போது மரம் வெட்டிய குழியில் இருந்த மண்ணைக் கையிலெடுத்த மரம் வெட்டுபவன், ஐயா இந்த மண் நல்ல விலைக்குப் போகும் என்று கூறினான். அப்பொழுது அங்கு வந்த ஊரின் பெரியவர், உங்களுக்கு பணம் தேவைப்படும் பொழுது நீங்கள் சேமித்து வைத்த பணத்தை செலவழியுங்கள். இல்லையென்றால் வேறு வழிகளைத் தேடுங்கள். அதை விட்டு விட்டு இயற்கை வளங்கள் தான் உங்கள் கண்களுக்குத் தெரியுமா? எத்தனை காலமா வளர்ந்த மரம் இன்று அடியோடு சாய்ந்து விட்டது. உங்களால் இப்படி வளர்க்க முடியுமா? என்று கேட்டார். அது போதாது என்று அதன் எல்லா பாகங்களையும் விலை பேசி விட்டீர்கள் சரி. கடைசியில் இந்த பூமித்தாயை விலை பேசுகிறாயே, நீ மனிதன் தானா, இந்த மண்ணை விற்பது உங்கள் தாயை விற்பதற்குச் சமம் என்று கூற, செந்திலுக்கு பளார் என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது.
நிச்சயம் எனது மூதாதையர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் எனக் கத்தினான்.
அவன் படுக்கைக்குப் பக்கத்தில் வந்த அம்மா, அப்பா இருவரும் ஒன்று சேர்ந்து என்ன என்று கேட்க
ஒன்றுமில்லையன்று சொல்லி சிறிது நீர் அருந்தி விட்டு மறுபடியும் உறங்கினான்.
மறு நாள், நிறைய ஆட்களை அழைத்து வந்து தோட்டத்தை சீர் செய்தான். வளர்ந்த மரங்களுக்கிடையில் குழி வெட்டி நல்ல புது மரங்களை நடச் செய்தான். அதோடு மட்டுமல்லாமல் நல்ல இயற்கை உரங்களை வாங்கி மரம் ,செடி, கொடிகளுக்கு இடச் சொன்னான். உண்மையிலேயே தோட்டம் ஒரு பொலிவு பெற்றதாகவே தோன்றியது.
அப்பொழுது அங்கு வந்த அப்பா செந்திலை உச்சி மோந்து பாராட்டினார்.
சரி நேற்று ராத்திரி ஏன் அப்படி கத்தினாய் என்று கேட்டார் அப்பா .
அப்பா அது ரகசியமாகவே இருக்கட்டும் என்றான்.
தலைமுறை சொத்தை அழிப்பது எளிது, அதை காப்பதே நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையெனக் கூறினான்.