வரன் பார்க்க வந்த மாப்பிள்ளைகள் எல்லாம் அவள் ஆடிப் பாடிய வீடியோக்களைப் பார்த்து ஒதுங்கிப் போனார்கள்.
அத்தனை துன்பத்தை அந்த வீடியோக்கள் தரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை வீணா. எல்லாம் தன் சந்தோசத்திற்காகவும் தன்னை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் விளையாட்டாக ஆடிப் பாடி எடுத்த வீடியோக்கள் தான் அவளுக்கு எதிராக விதியாக வந்து நின்றது.
“சார் இது என் பொண்ணு வீட்ல சும்மா இருக்கும்போது ஆடினது ; பாடுனது. அதைப் போய் தப்பா நினைக்கிறீங்களே? இப்ப இருக்கிற பசங்க எல்லாம் தங்களை வெளிப்படுத்துறதுக்கு இந்த சமூக வலைதளங்கள் தான் உதவியா இருக்கு. அதைப் போய் நீங்க தப்பா எடுத்தா எப்படி?” என்று வீணாவின் அப்பா, அம்மா எவ்வளவோ மன்றாடி பார்த்தார்கள். அதை அவர்கள் கேட்பதாக தெரியவில்லை.
” சார் நீங்க வேணும்னா அதை விளையாட்டுக்காக எடுத்திருக்கலாம். அந்த வீடியோவை நீங்க சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கலாம்.அதுக்கு கீழ வார கமெண்ட் போய் பாருங்க. இதுவரைக்கும் நீங்க எதையாவது படிச்சு பாத்து இருக்கீங்களா? உங்க பொண்ண திட்டறது மட்டும் இல்லாம, உங்க குடும்பத்தையே சந்திக்கு இழுத்து கேவலமாகப் பேசி இருக்கிறாங்க. அதப் பாத்துட்டு நீங்க ஆயிரக்கணக்கான வீடியோக்களை டவுன்லோட் பண்ணி இருக்கீங்க. இதுல பணம் வருது. உங்க பொண்ணு பிரபலமாகுறா அப்படிங்கறத விட நாலு பேரு உங்க பொண்ண பாக்கிறாங்க – அப்படிங்கறது தான் முக்கியம். ஆனா, அது இல்லையே உங்க வீட்டுக்கு பொண்ணப் பாக்க வர்ற வரைக்கும் எனக்கு அது தெரியல. ஆனா உத்துக் கவனிச்ச போது தான் இந்தப் பொண்ண நாம எங்கேயோ பாரத்திருக்கமே அப்படின்னு தோணிச்சு. எத்தனை வீடியோக்கள் விதவிதமான ஆடல், பாடல் இதெல்லாம் நீங்க கண்டிச்சு வச்சிருக்கணும் “
வரன் பார்க்க வந்தவர்கள் பேசியதைக் கேட்டு விழித்து நின்றார்கள் வீணாவின் குடும்பத்தார்கள்.
“ஒரு குடும்பப் பொண்ணா இருந்த உங்க மக இப்போ சினிமாக்காரி மாதிரி இருக்கா. நமக்கு சினிமா தான் தொழில்ன்னா ,அந்தப் பக்கம் போயிருங்க . ஏன்னா அவங்க எந்த அசிங்கம் பண்ணாலும் யாருக்கும் தெரியாது. அதை பெருசாவும் எடுத்துக்க மாட்டாங்க .ஒரு நடிகை பத்து பேரைக் கல்யாணம் பண்ணலாம். ஒரு நடிகர் நூறு பேர கல்யாணம் பண்ணலாம். யாரு யாரு கூடவும் வாழலாம் அப்படிங்கற எந்த ஒரு வரைமுறை இல்லாத இடம்தான் சினிமா . நான் சினிமாவுக்கு போறேன் அப்படின்னு உங்க பொண்ணு நினைச்சிருந்தா அது அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுடுங்க. குடும்பத்துல வாழனும்னா இந்த மாதிரி ஆடிப் பாடி வாழ்க்கையை வீணடிக்காதீங்க .எனக்கு உங்க பொண்ணு வேண்டாம் சார்” என்று வீணாவின் தாய் தகப்பன் முகத்திற்கு நேராகப் பேசிவிட்டு சென்றவர்கள் ஏராளம்.
” அம்மா இப்படி ஆகும்னு நினைக்கலம்மா. படிச்சிட்டு வீட்ல சும்மா தானே இருக்கேன்னு அந்த வீடியோக்களை சமூக வலைதளங்கள்ல போட்டேன். இவ்வளவு பிரச்சனை நடக்கும் அப்படின்னா நான் நிச்சயமா அதெல்லாம் பண்ணி இருக்க மாட்டேன்ம்மா” என்று கண்ணீர் மல்கப் பேசினாள் வீணா .
“அது உன் தப்பு இல்லம்மா. எங்க தப்பு .நீ முதல் வீடியோ போடும் போதே அதக் கண்டிச்சு இருந்தோம்னா, நீ அடுத்தடுத்து போட்டு இருக்க மாட்ட. சரி நம்ம பொண்ணு பிரபலமாகுறா. மத்தவங்களுக்கும் தெரியுது. அப்படின்னு நாங்களும் உட்டுட்டோம். ஆனா இப்ப எங்க வந்து நிக்குது பார் ? ஒன்னு நீ குடும்ப பொண்ணா வாழனும் அப்படின்னா, இந்த வீடியோ போடறத நிப்பாட்டு. இந்த சின்ன சின்ன சந்தோசம் கொஞ்சம் வருமானம் கிடைக்கிற இந்த youtube தான் உனக்கு தேவைன்னா இதிலே நீ போ. எங்கள பத்தி நீ கவலைப்படாத . எங்களைப்பற்றி யோசிக்காத. உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கு ” என்று வீணாவின் தாய் தகப்பன் கைவிரித்தார்கள் .
அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நல்ல கருத்துக்களை, நல்ல சிந்தனைகளை நம் படைப்புகளை வெளியிடுவதற்கு பாலமாக இருக்கும் இந்த சமூக வலைதளங்களை சில பெண்கள் ஆபாசமாக ,இரட்டை அர்த்தத்தில் பேசினால் தான் பார்வையாளர்கள் கூடுவார்கள். லைக் கமெண்ட் அதிகமாகும் என்று தவறான கண்ணோட்டத்தில் தவறான அணுகு முறையில் வீடியோக்கள் பாேடுகிறார்கள் . இதனால் நல்ல பெண்களுக்கும் கெட்ட பேர் வந்திருது . ஏன் பிரபலம் ஆகணும்னு வீடியோ போட்டு தான் ஆகனும்ங்கிறதில்ல.ஒரு குடும்பத்தில, நல்ல பெண்ணா, குடும்பத் தலைவியா , ஒரு தாயா வாழ்ந்தாலே அதுவே பெரிய விஷயம் .இனிமேல் தான் வீடியோ போடுவதில்லை என்று முடிவெடுத்தாள் வீணா.
சமூக வலைதளங்களில் இருந்த அத்தனை வீடியோக்களையும் அழித்தாள்.
மறுநாளில் இருந்து செல்போனை பேசுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த துவங்கினாள். தவறியும் அவள் ரீல்ஸ் facebook என்று சமூக வலைதளங்களுக்கு செல்லவில்லை.
திடீரென ஒரு வரன் வந்தது. இதுவும் தட்டிக் கழித்து போய்விடுமோ ? என்று வருத்தப்பட்டார்கள் வீணாவின் பெற்றோர்கள்.
ஆனால் அந்த வரன் சிறப்பாக அமைந்தது
” உங்க பொண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் கல்யாணம் பண்ணிக்கிற தயாரா இருக்கேன். உங்களுக்கு சம்மதமா?” என்று வெளிப்படையாகக் கேட்டான் அன்று பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை
இந்த வார்த்தையை கேட்ட வீணா பெற்றோர்களின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.
“ஆனா ஒரு கண்டிஷன் நான் ஒரு youtuber கல்யாணத்துக்கு அப்புறம் என் கூட உங்க பொண்ணு ஆடணும் பாடணும் அதை யூ டியூப்பில நான் போடணும். அதுக்கு சம்மதம்னா நான் உடனே உங்க பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று வந்த மாப்பிள்ளை கேட்க
‘இது என்னடா சோதனை ‘ என்று நினைத்த வீணாவின் பெற்றோர்கள்
“சரி சரி அதெல்லாம் பண்ணுவா. இதுவரைக்கும் அவ அந்த மாதிரி பண்ணது இல்ல. உங்களுக்காக கட்டிக்க போற புருஷன் நல்லா இருக்கணும். அவருக்காக என்ன வேணாலும் செய்வா என் பொண்ணு. நீங்க தாராளமா யூடியூப் ஆரம்பிங்க .என் பொண்ணு ஆடுவா பாடுவா “என்று உறுதி சொன்னார்கள் வீணாவின் பெற்றோர்கள்.
இதை நினைத்து சிரிப்பதா? அழுவதா ? வருத்தப்படுவதா? என்று தெரியாமல் கதவை அடைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள் வீணாவின் பெற்றோர்கள்.
” வீணா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் .அதுக்கு முன்னோட்டமா நீயும் நானும் சேந்து இப்போ ரீலீஸ் பண்றோம். அதை சமூக வலைதளத்தில ஏத்துறோம். லைக், கமெண்ட் வாங்கறோம் எங்க இப்படி வா “
என்று தன் மொபைல் பாேன் கேமராவை ஆன் செய்து ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கினான் மாப்பிள்ளை. அவனோடு நடனமாட ஆரம்பித்தாள் வீணா .இதை மறைந்திருந்து பார்த்தார்கள் வீணாவின் பெற்றோர்கள்.
இதைப் பார்த்து கைதட்டிச் சிரித்தார்கள் மாப்பிள்ளையின் குடும்பத்தார்கள்.
யூ டியூப்பர்ஸ் தந்துநானே ….
#சிறுகதை