செய்திகள்

யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, ஜன. 17–

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக, கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த ஆண்டு மே மாதம் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர். திருச்சி, பெரம்பலூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தாம்பரம், சேலம், நாகப்பட்டினம், நெல்லை, நீலகிரி ஆகிய நகரங்களில் 16 காவல் நிலையங்களில், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவானது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பல வழக்குகளை எதிர்கொண்ட சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நில அபகரிப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என தனது யூ டியூப்பில் சேனலில் பேட்டியளித்து, தவறான தகவல்களை பரப்பியதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், சவுக்கு சங்கர் தொடர்ந்து இது போன்று தவறான தகவல்களை அளித்து வருவதாக கூறினார். இதனையடுத்து, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *