நியூயார்க், பிப். 17–
யூடியூப் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சார்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். கடந்த 9 ஆண்டுகளாக யூடியூப் சி.இ.ஓ ஆக பணியாற்றி வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று பதவி விலகினார்.
இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கூகுளின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்த அவர், தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையிலேயே, யூ–டியூபின் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன், புதிய தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த நீல் மோகன்?
தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாக திகழும் நீல் மோகன் இந்திய வம்சாவளியை சார்ந்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் மார்ச் 2008 முதல் நவம்பர் 2015 வரை கூகுளில் காட்சி மற்றும் வீடியோ விளம்பரங்களின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கு முன், இணைய விளம்பரச் சேவையான ‘டபுள்கிளிக்’ (DoubleClick) இல் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.
மேலும் கடந்த 2013-ல் மோகனுக்கு டுவிட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மோகனை டுவிட்டரில் சேரவிடாமல் தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை (ரூ.827 கோடி) அவருக்கு வழங்கியது.