எடப்பாடி பழனிசாமி, வைகோ, அண்ணாமலை கண்டனம்
சென்னை, மார்ச்.25-–
யூ–டியூபர் சவுக்கு சங்கரின் வீட்டை சூறையாடிய மர்மகும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி, வைகோ, அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
யூடியூபர் சவுக்கு சங்கர் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது வயதான தாயாருடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இதற்கிடையே சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு திரண்ட மர்மகும்பல் பின்பக்க கதவை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தி சூறையாடினர். வீட்டுக்குள் கழிவுநீரையும் ஊற்றினார்கள். சவுக்கு சங்கரின் தாயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் நேற்று (24–ந் தேதி) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.
இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அண்ணா தி.மு.க. பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-
ஊடகவியாளர் சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து ஒரு கும்பல் மனித கழிவு மற்றும் சாக்கடை நீரை ஊற்றி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தூய்மை பணியாளர் போர்வையில் சவுக்கு சங்கர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் அராஜகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இத்தகைய விபரீதங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல், ஜனநாயகத்தின் அடித்தளம் செல்லரித்து போய்விடும். இந்த தாக்குதல் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘தி.மு.க. அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதை கூறியதற்காக சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையை கடுமையாக கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், போலீஸ் துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.