வர்த்தகம்

யூகோ வங்கியின் சலுகை அறிவிப்புகள், புதிய திட்டங்கள் – நிர்வாக இயக்குநர் அதுல் குமார் கோயல் விளக்கம்

சென்னை, சூன் 8–

வாடிக்கையாளர்களுக்கு தொழில் விரிவாக்கத்துக்கான புதிய கடன் திட்டங்கள், பெருந்தொற்று கால சலுகைகளை யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அதுல் குமார் கோயல் அறிமுகப்படுத்தினார்.

யூகோ வங்கி சார்பில் கொரோனா பெருந்தொற்றின் நடப்பு இரண்டாம் அலை காரணமாக, வாடிக்கைகயாளர்களுக்கு உதவும் வகையிலான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பதற்கான இணையம் வழியான கூட்டம் நேற்று பிற்பகலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கியாளர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட யூகோ வங்கியின் தலைமை செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான அதுல் குமார் கோயல் தெரிவித்ததாவது:–

கோவிட்–19 பெருந்தொற்று கடந்த ஓராண்டை கடந்து இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்த பெருந்தொற்று ஏற்பட்ட கடந்த ஆண்டில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, கடன்களுக்கான தவணை கால நீட்டிப்பு, டிஜிட்டல் வங்கி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம். தற்போது கோவிட் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுசீரமைப்பு செயல்பாடு

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, முற்றிலும் இணைய வழியில் வங்கி நடவடிக்கைகளை கையாலும் வகையில் டிஜிட்டல் முறையில் கையாளும் வகையில் வங்கியின் இணைய செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் யாரும் நேரில் வரவேண்டியதில்லை. வீட்டில் இருந்தே இணையம் மூலமாக தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வழியாக அனைத்து வங்கிச் செயல்பாடுகளையும் கையாள முடியும்.

மேலும் கொரோனா இரண்டாம் அலையின் காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, தனிநபர்களும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அவர்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும் வகையில், அவர்கள் தங்கள் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்துகொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களை செலுத்துவதற்கான கால அளவை, 6/12/18/24 மாதங்கள் நீட்டித்துக் கொள்ளும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் கடன்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

3 புதிய கடன் திட்டங்கள்

மேலும், யூகோ வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூகோ சஞ்சீவினி, யூகோ ஆரோக்கியா, மற்றும் யூகோவேக்ஸ்–999 ஆகிய 3 புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இதில் யூகோ சஞ்சீவினி திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஜன் பிளான்ட்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி வரையில் கடன்கள் வழங்கப்படும். மேலும் இந்த கடன்களுக்கான வட்டியை பொறுத்த அளவில் 7.5 என்ற குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து , யூகோ ஆரோக்கியா திட்டத்தின் மூலம், மருத்துவமனைகள் உயர்தர கருவிகளை நிறுவவும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ.100 கோடி வரையில் கடன்கள் வழங்கப்படும். அதனை தவிர்த்து, கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை காக்கும் வகையில், கோவிட் சிகிச்சைகளை மேற்கொள்ள ரூ.5 லட்சம் வரையில் தனிநபர் கடன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

யூகோவேக்ஸ்–999 திட்டம்

மேலும் யூகோவேக்ஸ்–999 திட்டத்தின் மூலம் வங்கி நிலையான வைப்பு நிதிக்கு (fixed deposit) கூடுதல் வட்டி வழங்கப்படும். அதாவது, வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களின் 999 நாள் நிலையான வைப்பு நிதி திட்டத்துக்கு 5 சதவீதத்தில் இருந்து, 5.30 சதவீதமாக வட்டி உயர்த்தி வழங்கப்படும்.

அதுதவிர, யூகோ வங்கி பணியாளர்களின் நலன்களை காக்கும் வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பணியார்களுக்கு சிகிச்சை, தொற்று பாதிக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன், ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி புரியும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் கொரோனா இரண்டாம் அலையின் போது யூகோ வங்கி சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டது என்று, யூகோ வங்கியின் தலைமை செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான அதுல் குமார் கோயல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *