சினிமா செய்திகள்

யூகி – “வந்தே பாரத்” ரயில் வேகத்தில் ஓடும் திரைக்கதை: கதிர், நரேன், நட்டி போட்டா போட்டி நடிப்பு !

கடத்தல், கொலை, தற்கொலை, சஸ்பென்ஸ், திரில்லர்

டாக்டர் பிரபு திலக்-: எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெண் காவல்துறை அதிகாரியாக உயர்ந்த பதவியில் இருந்த திலகவதி அம்மையாரை (ஐபிஎஸ்) நினைவிருக்கிறதா? அவருடைய மகன் தான் இவர் . தாயாரின் பரிபூரண ஆசியில் சினிமாவில் விநியோகஸ்தராக வலது கால் எடுத்து வைத்திருக்கும் அன்பு மகன்.

டாக்டர் பிரபு திலக்.

ஓடுமீன் ஓட … உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு…

வகைதான் டாக்டர் பிரபு திலக் என்று சொல்ல வேண்டும்.

என்ன காரணம்?

வாரத்திற்கு நாலு படம் என்று புற்றீசல் வேகத்தில் 90 சதவிகிதம் புதுமுகங்களோடு திரைக்கு வரும் படங்களில்…

“இது வித்தியாசமான கதைக்களம்; பாதை மாறி பயணித்து இருக்கும் கலைஞர்கள்; கைக்கு அடக்கமான விலையில் கையில் எடுத்தாலும் சுட்டுக்கொள்ள மாட்டோம்”என்று ஒரு அபரிமிதமான நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, திரைக்கு கொண்டு வருகிறாரே, ஒவ்வொரு படத்தையும். அதில் டாக்டர் பிரபு திலக்கின் மாற்று ரசனையும் புத்திசாலித்தனமும் புலப்படும்.

(பொறுமையாக யோசித்து முடிவெடுக்கும் சுபாவக்காரர் என்பது முகத்திலேயே தெரிகிறதே…)

யூகி : அடுத்து என்னவாக இருக்கும் என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதால் இந்தத் தலைப்பு .ராஜா தாஸ் குரியாஸ், சிஜூ மாத்யூ, நீவிஸ் சேவியர், லவ-–குசன் தயாரிப்பாளர்கள்.

ஜாக் ஹாரிஸ் இயக்குனர். அதிரடி ஆக்சன் மசாலாவுக்கு அதிகம் மெனக்கெட்டு இருக்கிறார். (ஒரே நேரத்தில் தமிழ் மலையாளத்தில் தயாரிப்பு.)

பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதம் முன்னால் போலீஸ் அதிகாரி பிரதாப் போத்தனின் மகள் (சின்னவீடு செட்டப்) கடத்தப்படுகிறாள். அவளைக் கண்டுபிடித்து கொடுக்குமாறு இன்னொரு துப்பறியும் அதிகாரி நரேனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் பிரதாப்.

நரேன், காவல்துறை இளம் ஆய்வாளர் கதிரை தன் துணைக்கு இணைத்துக் கொண்டு கடத்தல் ஆசாமிக்கு வலை வீசுகிறார்.

இதற்கு இடையில் வாடகைத் தாயாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்தில் கதிரின் மனைவி. அவர் படுகொலை. அடுத்து பிரபல நடிகர் கொலை, அவரோடு துணையாய் இருந்த பெண் டாக்டர் தூக்கில் தொங்கி தற்கொலை… இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள்.

இடியாப்ப சிக்கல் கணக்காய் முடிச்சு இறுகி கிடக்க, ஒவ்வொரு ஃப்ரேமிலும் பதட்டம்- பரபரப்பு- பதைபதைப்பு. மர்ம முடிச்சு எப்படி, எப்போது அவிழ்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கை நுனியில் ரசிகர்கள்.

நரேன் – -கதிர் துப்பறியும் வேட்டைக்கு நடுவில் ஐயப்ப சாமி வேடத்தில் நட்டி, சூடு பிடிக்கும் களத்தில். ஆயுத எழுத்து (ஃ) தமிழுக்கு சிறப்பு இல்லையா, அதே போலவே, யூகி படத்தில் இந்த மூவரும்.

கிரிமினலை தேடும் படலத்திற்கு நடுவில் குடும்ப வாழ்க்கை, கதிருக்கு ஆனந்தியோடு. அது ஒரு தனிக்கதை.

மலையாளத்திலும் ஓர் இளைஞர் நம்ம ஊர் பாக்யராஜ் (ராமலிங்கம்) பெயரில். அந்தப் பெயர் ராசி மலையாளத்துக்கும் மவுசை தந்திருக்கிறது.

ஒளிப்பதிவு புஷ்பராஜ் சந்தோஷ். படத்தொகுப்பு ஜோமின். இசை ரஞ்சித் ராஜ். (பின்னணி இசை மிரட்டல், சூடு பறக்கும் வேகத்துக்கு திரைக்கதை) சஸ்பென்ஸ் திரில்லருக்கு பாடல்கள் தேவையா? வெட், செலவை தவிர்த்து இருக்கலாமே?!

கொலையாளி யார்? முடிச்சை அவிழ்ப்பதில் திரைக்கதை ஒவ்வொரு ஃபிரேமிலும் திடீர் திருப்பம். திரையை கண் கொட்டாமல் பார்க்க வைக்கும்.

யூகி: அதிரடி

ஆக் ஷன் திரில்லர்;

“வந்தே பாரத்” ரயிலின்

சொகுசு பயண சுகம்!


வீ. ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *