செய்திகள்

யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற 9 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Makkal Kural Official

சென்னை, ஜன.21-–

யு.ஜி.சி.யின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 9 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து எனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறேன். வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள், மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன.

பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது. மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால், வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றது. அது ஒரு சுமையாக அமைந்துவிடும்.

நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. அது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு பட்டப் படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது, அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்வது போல் ஆகிவிடும். அது மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும்.

4 ஆண்டுகள் கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை எம்.டெக். அல்லது எம்.இ. படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், பொறியியல் முதுகலை படிப்பின்போது மாணவர்கள் சிரமப்படலாம். இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

கற்றலின் ஓட்டத்தை தற்போதுள்ள கல்வி முறை உறுதி செய்கிறது. ஆனால் அதை எம்.இ.எம்.இ. சீர்குலைத்து, இடைநிற்றலை சட்டப்பூர்வ மாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கிறது.

துணைவேந்தர் தேடல்

குழுவிலிருந்து நீக்கம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல், பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான யு.ஜி.சி.யின் நெறிமுறைகள் ஏற்புடையதாக இல்லை. அதன்படி, கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமிக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.

துணைவேந்தர் தேடல் குழுவில் மாநில அரசு நீக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்புடையது அல்ல. வரைவு விதிமுறைகளில் உள்ள பல விதிகள், மாநில பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தும்.

எனவே, விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை மத்திய கல்வி அமைச்சகம் திரும்பப் பெற்று, தமிழ்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உள்பட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

9 மாநில முதல்வருக்கு கடிதம்

இதேபோல் டெல்லி, இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா சட்டமன்றங்களிலும் யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று கோரி, அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். யு.ஜி.சி.யின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள், மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல். இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதிகாரத்தை மையப்படுத்தி நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். எனவே எனது இந்தக் கோரிக்கையை முதலமைச்சர்களாகிய நீங்கள் பரிசீலித்து உங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *