நாடும் நடப்பும்

யுகங்களை கண்ட நகரம், சென்னை வயது 382 சரியா?


ஆர். முத்துக்குமார்


சமீபத்தில் வந்த ஒரு ‘வாட்ஸ் அப்’ குறுந்தகவல் போர்த்துக்கீசிய சொற்றொடர் ‘Madre de Deus’ அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Mother of God’ என்பதாம்.

ஆங்கிலேயர்கள் 16–ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நமது சென்னை கடற்கரையோரத்தில் தரையிறங்கி வணிகம் செய்யத் துவங்கினர். ஆனால் ஆகஸ்ட் 22, 1639–ல் வியாபாரிகளாக வந்த கிழக்கிந்திய நிறுவனத்தினர் தங்களுக்காக தலைமை அலுவலகம் ஏற்படுத்த சென்னையில் விஜயநகர அரசரின் பிரதிநிதிகளிடம் வாங்கிய நிலப்பரப்பை பதிவுசெய்த தினமாகும். அன்று புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை உருவானது. அன்று முதல் மதராசபட்டினம் என்ற நகரம் உலக வரைபடத்தில் முக்கிய பங்காற்ற துவங்கியது.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை வாங்கிய அந்நாளில் மதராஸ் அல்லது தற்போது சென்னை என்று அழைக்கப்படும் நகரம் உருவானதா? அதாவது அன்றுதான் ‘பிறந்தநாள்’ என்று கொண்டாடுவது சரியா?

ஆக சென்னையின் வயது 382 என்று சொல்லி கொண்டாடுவது சரியா?

ஒருவரின் பிறந்தநாள் வேறு, பிறகு வரும் கொண்டாட்ட நாட்கள், உதாரணத்திற்கு திருமண நாள் வெவ்வேறு தானே!

அதுபோன்று தான் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள், மதபோதகர்கள், அந்நாட்டு ராஜாங்க பிரதிநிதிகள் 15–ம் நூற்றாண்டிலேயே தென் இந்தியாவுக்குள் வந்துவிட்டனர்.

கடலோடி மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் கால்தடம் பதித்ததை வரலாற்றுப் பாடம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

அவர்கள் கடற்கரையோரப் பகுதிகளில் தான் அதிகம் நுழைந்து உள்ளூர் மக்களுடன் வர்த்தகம் புரிந்துள்ளனர்.

அவர்களின் வருகையும் சென்னையில் இருந்ததற்கு பல அதிகாரப்பூர்வ சான்றுகள் இருக்கிறது.

சென்னையின் இன்றைய மயிலாப்பூர் 15–ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மக்களால் அதிகம் உபயோகிக்கப்பட்டதால் அப்பகுதியில் லஸ் சர்ச் உருவாகியிருக்கிறது. பின்னர் இன்றைய சாந்தோம் சர்ச்சும் விரிவாகவும் உயரமாகவும் கட்டப்பட்டும் இருக்கிறது.

அதுமட்டுமா? போர்த்துகீசிய கலவை சொற்கள், அலமாரி, அன்னாச்சிப்பழம், சாவி, கால்சட்டை, கடிதாசி, கோப்பை, கொய்யா, பீப்பா, பிஸ்கோத்து, பாய்மரம், கைலி, பாய்லா ஆட்டம் போன்று பல சொற்கள் வழக்கத்திற்கு வந்து இன்று அன்றாட உபயோகத்தில் தமிழகத்திலும் இலங்கைத் தமிழர் மத்தியிலும் இருக்கிறது.

ஆக, தமிழ் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பே பல்வேறு மொழி பேசியவர்கள் கலப்புகளால் புதுச்சொற்களை பெற்றுள்ளது!

ஆக, சங்க தமிழுக்கு மதுரை என்றால் இன்று பேசப்படும் தமிழின் உருவாக்கம் பண்டைய சென்னை. அதாவது மயிலை என்று சொன்னால் அது சரியானதுதான்.

சென்னை வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையாவின் புத்தகங்கள், கட்டுரைகளை படித்தவர்கள் சென்னையின் வரலாற்று சிறப்புகளை உணர்ந்து பூரிப்பார்கள்.

ஆனால் கிறிஸ்துவ காலண்டர்படி கிறிஸ்துவுக்கு முன் கி.மு, கிறிஸ்துவுக்குப் பின் கி.பி. என்று பார்த்தால் இயேசுநாதர் பிறந்த வருடம் என்று? என்பதை உறுதியாகக் கூறிட முடியாமல் இருக்கலாம். ஆனால் பைபிள் உட்பட பல்வேறு அதிகாரபூர்வ சான்றுகள்படி அவரது 33வது வயதில் சிலுவையில் அறையப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.

அந்த காலகட்டத்தில் இயேசுநாதருடன் இருந்த 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் செயின்ட் தாமஸ் என்று அழைக்கப்பட்டவர் யூதர்களிடம் இருந்து தப்பி, மத்திய ஆசியா வழியாக இந்தியாவிற்கு கி.பி. 52 ம் ஆண்டு வந்து தஞ்சம் புகுந்துள்ளார்.

அவர் சிரியாவிலும் கேரளாவிலும் சென்னையிலும் மதபோதனை செய்து வாழ்ந்திருக்கிறார். அவர் இயேசு நாதர் உயிர்ப்பித்தார் என்ற செய்தியை நம்பாதவர்! அவர் கண்முன் சிலுவையில் அறைந்த போதே மடிந்துவிட்டார் என்பதால் அதை நம்ப மறுத்தவர்.

ஆகவே யூதர்களின் எதிரியாகவும் கிறிஸ்தவர்களின் கோபத்திற்கு ஆளானவருமாய் இருந்தார்!

அவரது பெயரால் தான் செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று மலைகுன்றில் ஓர் கிறிஸ்துவ ஆலயமும் உருவாகியிருக்கிறது.

அவர் ஆடு மாடு மேய்ப்பவர்களால் முதுகில் அம்பு எய்தப்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதில் கவனிக்க வேண்டியது அவரது 80-வது வயதில் இறந்து இருக்கலாம்.சைதாப்பேட்டை சின்னமலையில் தங்கியிருந்தார் என்றும் பரங்கிமலையில் கொலை செய்யப்பட்டார் என்றும் வரலாறு கூறுகிறது.

அதாவது இயேசு பிறந்த வருடத்தில் இருந்து 80 வது வயதில், அதாவது 80வது வயதில் சென்னை என்ற ஓர் குழும சமுதாயத்தில் வாழ்ந்திருக்கிறார்!

திருவள்ளுவர் நமக்கு தந்துள்ள திருக்குறளும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று பார்க்கும்போது அவரும் மயிலாப்பூர் பகுதியில் வாழ்ந்தவர் என்று குறிப்பிடப்படுவதால் சென்னை அன்றே அறிவாளிகள் வாழ்ந்த பகுதியாகவே இருந்தும் இருக்கிறதல்லவா?

பண்டைய சென்னை அதாவது இரண்டாம் நூற்றாண்டுகளில் என்ன இருந்தது என்பன போன்றவற்றின் வரலாறு கிடையாது. ஆனால் நம் பல்லாவர மலை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான ஒன்று என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தம்பூரம், அதாவது இன்றைய தாம்பரம், சென்னையின் பூர்வீகம் பற்றி ஸ்காட்லாந்தின் ராணுவ அதிகாரி மற்றும் வரலாற்று ஆராய்சியாளர் கர்னல் காலின் மெக்கன்சி இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் என்ற முறையில் அவர் சேகரித்த பல வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் பல முக்கிய அம்சங்களை சென்னையை பற்றி கூறியுள்ளார். அவர் 1821–ல் பல தகவல்களை நாடு முழுவதும் பயணித்து தங்கி இருந்தும் சேகரித்துள்ளார்.

அவை வரலாற்று சான்றுகள் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தற்போது கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறது.

பல்லாவரம் , தாம்பரம் , மயிலாப்பூர், திருவான்மியூர், சோழங்கநல்லூர், புலியூர், மும்மூடிச்

சோழபுரம் ( திருவேற்காடு) , மாமல்லபுரம் ஆகிய இன்றைய சென்னையின் பகுதிகளும் புறநகர் பகுதிகளும் கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் வரையில் நரசிம்ம , மகேந்திர,நந்தி வர்ம பல்லவ மன்னர்கள், உத்தமச்சோழன் , ஆதித்திய கரிகாலன் , ராஜராஜ , ராஜேந்திர , குலோத்துங்க சோழ மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதற்கு ஏராளமான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. அந்தவகையில் பார்த்தால் சென்னையின் வயது 2000 ஆண்டு என்று கூட வரையறுக்கலாம்.

இந்த குறிப்புகள் சுட்டிக்காட்டுவது 2000 ஆண்டுக்கு முன்பே புலியூர் கோட்டம் இருந்திருக்கிறது.

அப்போதைய சோழர்கள் காஞ்சிபுரத்தை தலைமையாகக் கொண்டு இருந்த சிறு ராஜ்யத்தின் ஓர் அங்கமாக புலியூர் கோட்டம் இருந்து இருக்கிறது. ஆண்ட குரும்பர்கள், பிறகு தொண்டைமான் ஆண்டு இருக்கிறார்.

அந்த புலியூர் கோட்டத்தை பிரித்து பார்த்தால் அதில் இன்றைய சென்னையின் பல பகுதிகள் இருக்கிறது.

ஆக புலியூர் தான் சென்னையின் ரிஷி மூலம்! ஆனால் இன்றோ கோடம்பாக்கத்தில் ஒரு சிறு பகுதியின் சாலைகளுக்கான பெயராக மட்டும் நம்மிடம் இருக்கிறது!

ஆக பிரிட்டிஸ்காரர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆட்சி புரிய ஆரம்பிக்கும் வரை பல மன்னர்கள் ஆட்சி செய்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆக மெக்கென்சியால் சேகரிக்கப்பட்ட பல அரிய சான்றுகளையும், சுவடிகளையும், நாணயங்கள் இதர பண்டைய பொருட்களை வரலாற்று பாடம் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்க செய்தாக வேண்டும்.

ஆதி மனிதன் உபயோகித்த கருவிகள் சென்னையின் அருகாமையில் உள்ள அத்திரம்பாக்கம் அருகில் ஓடும் கொற்றலை ஆற்றங்கரைகளில் பழைய கற்கால நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய புவியியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அங்குள்ள குகை வீடுகளில் இருக்கும் கற்கருவிகள் கார்பன் டேட்டிங் முறைப்படி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் உண்மை அவை 15 லட்சம் ஆண்டுகள் பழமையானவையாம்!

மனித இன வல்லுனர்கள் கூறுவது, அப்போதைய மனித இனத்தை ‘Homo Erectus’ என்று வகைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இருக்கிறார்கள். அவர்களது தொடர்ச்சியே தமிழ்நாட்டிலும் தென்படுகிறது.

ஆக வெள்ளையர்கள் வந்து இங்கு நாகரீகம் தொடங்கியுள்ளது என்பதை குறிக்கும் 382 வது பிறந்தநாள் சரியா?

முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் வரலாற்றை பெருமைப்படுத்த அருங்காட்சியங்களை நவீனமாக்கிட வேண்டும். தற்போதைய சென்னை அருங்காட்சியகமே பண்டையகால இடிபாடு போல் தான் இருக்கிறது!

அதை நவீன கணினியுக வசதிகளுடன் காட்சி பெட்டகமாக உயர்த்தப்பட வேண்டும்.

குறிப்பாக சென்னையின் பழமையான வரலாறு மற்றும் சிறப்புகளை கொண்ட பிரத்யேக அருங்காட்சியகமும் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழகம், தமிழகத்தின் பல்வேறு சிறப்புகளையும் தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பெருமைகளையும் கொண்ட அப்படிப்பட்ட அருங்காட்சியம் சுற்றுலா பயணிகளை வரவைக்கும், நம் பெருமைகளை பிற்கால தலைமுறைகளும் மறந்து விடாது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *