மயில்வாகனனைச் சந்தித்தால் வேலை கிடைக்கும் என்று சத்யாவின் அப்பா சீலன் நச்சரித்துக் கொண்டே இருந்தார் .
“அப்பா இன்னைக்கு போறேன்”
என்று சீலனிடம் சலிப்பான வார்த்தையில் சொன்னான் சத்யா .
“அவங்க எல்லாம் பெரிய மனுசங்கடா அவங்க நினைச்சா என்ன வேணாலும் செய்ய முடியும் உனக்கு. சாதாரணமா ஒனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியும். நீ போய் அவர நாளைக்கு காலைல பாரு ” என்று அன்றும் விரட்டினார் சீலன்.
” சரிப்பா நான் போறேன்”
என்றவன் அன்று காலை பத்து மணிக்கு எல்லாம் அவரின் வீட்டின் முன்னால் போய் நின்றான் .அவனைக் குறுகுறுவெனப் பார்த்த வீட்டுக் காவல்காரன் “நீங்க யாரப் பார்க்கணும்? ” என்றான்.
“மயில்வாகனன் சாரப் பாக்கணும்’’ என்றான் சத்யா.
“அவர் வெளியே போயிட்டாரு ” என்று பதில் சொன்னான் காவல்காரன்.
” என்னது வெளியே போய்ட்டாரா? இந்த காலையில போயிட்டாரா ?” என்று எதிர் கேள்வி கேட்டான் சத்யா.
” ஆமா கார் கிளம்பிருச்சு. நீங்க இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எப்படி இங்க இருப்பாரு ? நாளைக்கு காலையில வாங்க ” என்றான் வீட்டுக் காவல்க்காரன்.
” சரி நாளைக்கு காலைல வரேன்” என்று சொல்லிச் சென்றான் சத்யா
“என்ன இது மயில்வாகனன் பெரிய ஆளு அவர சந்திச்சா எல்லாம் நடக்கும்னு அப்பா சொன்னாரு. ஆனா இப்ப அவர் யாரையோ பாக்க போயிட்டாரே ? இது உண்மையா ? “
என்று யோசித்தான் சத்யா
” ஒருவேளை காவல்காரன் நம்மகிட்ட பொய்
சொல்றானோ ? என்று அந்த இடத்தை நோட்டமிட்டான். அவன் சொல்வது உண்மைதான் என்று தெரிந்தது.
“இந்த அதிகாலை நேரத்திலயா வெளிய போவாரு?” என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான் சத்யா
” என்ன போய் பாத்தியா? என்றார் சீலன்.
” நான் காலையிலயே வீட்டுக்கு போனேன் .அவர் வெளியே போயிட்டாராம்.. “
” எத்தனை மணிக்கு போன ?”
“பத்து மணிக்கு “
” பத்து மணிக்கு போனா, அவர் எப்படி இருப்பாரு ? ” அதிகாலைல போகணும் “
“ஏன் அவரு முதலாளி தானே? எப்ப வேணாலும் போகலாமே? “
என்று தத்துவம் பேசினான் சத்யா .
கோபப்பட்ட சீலன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
” இங்க யாரும் பெரியவங்க இல்லை. நமக்கு மயில்வாகனன் பெரியவர். மயில்வாகனனுக்கு இன்னொருத்தவங்க பெரியவங்க. அந்த இன்னொருத்த வங்களுக்கு இன்னொருத்தவங்க பெரியவங்க. இப்படித்தான் செயின் மாதிரி வாழ்க்கை போயிட்டே இருக்கும். ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவனுக்கு அது பெருசுன்னா ,ஒரு லட்சம் ரூபா சம்பாதிக்கிறவனுக்கு அது பெரிசு. அதுக்கு மேல சம்பாதிக்கிறவனக்கு அது பெருசு . இப்படியே நீண்டுகிட்டு தான் போகும் இந்த வாழ்க்கை.
அதனால யாருக்கு யாரும் இங்க பெருசு கிடையாது. .அதனால அதிகாலையில நீ அவரப் பாக்கப் போனா தான் பிடிக்க முடியும். .இல்லன்னா அவரு அவர விட உயர்ந்த மனுசனத் தேடி போயிருப்பார்” என்று ஒரு பெரியவர் சொல்ல டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவனுக்கு தொண்டையில் மட்டுமல்ல மூளையிலும் அவர் சொன்னது சுட்டது.
மயில்வாகனன் உண்மையில் அவரைவிடப் பணத்தில் புகழில் பெரிய மனிதனின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார் . ஆனால் மயில்வாகனன் தேடிச் சென்றிருந்த அந்தப் பெரிய மனிதர் அவரைவிடப் பெரிய ஆளைத் தேடி சென்றிருந்தார் .
“லேட்டா வந்துட்டேன் போல. நாளைக்கு அதிகாலையில வந்துரனும் ” என்று மயில்வாகனன் முடிவு செய்தார். மயில்வாகனன் தேடிச்சென்ற அந்தப் பெரிய மனிதர் இன்னொருவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார். இங்கு காத்திருப்பது, தேடிச் செல்வது எல்லாம் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
அவரவரைத் தேடிச் செல்வது, நாடிச் செல்வது என்பது இயல்பான ஒன்றுதான். இங்கு யாரும் யாருக்கும் பெரியவன் இல்லை என்பது காத்திருக்கும் நபர்களுக்குத் தெரியும் .
“இதில் சத்யாவும் மயில்வாகனனும் விதிவிலக்கல்ல. மறுநாள் அதிகாலையிலேயே மயில்வாகனனைத் தேடி புறப்பட்டான் சத்யா.
சூப்பராக இருக்கு சார். உண்மையான பெரியவர் என்னைப்பொறுத்தவர் கடவுள்தான்