சிறுகதை

யார் திருடன் ? | ராஜா ராமன்

Spread the love

பெரியவர் தன்னுடைய காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு அருகில் இருந்த பேக்கரிக்குள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்த இவரை கவனத்தில் கொள்ளாமல் கடை உரிமையாளர் மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

கடை ஊழியர் அருகில் சென்ற அந்த பெரியவர் ஷோக்கேசில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த சுவீட்களை பார்த்துவிட்டு. பிறகு தன் முன்னால் நின்ற ஊழியரிடம்.அந்த ஆரஞ்சு கலரில் உள்ள லட்டு கிலோ எவ்வளவுப்பா…

420 ரூபாய் சார்..

அதுல ஒரு கிலோ போடுப்பா…

பெரியவர் கேட்டதை எடுத்து ஒரு கிலோ எடைபோட்டு அதை அட்டை பெட்டியில் பேக்கிங் செய்தான் அந்த ஊழியர்..அதன்பிறகு

கடையைச் சுற்றிப் பார்த்தபடியே மேலும் சில பொருள்களை வாங்கினார் பெரியவர். கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பியனார் பெரியவர். கடைக்குள் மேலும் சில கஷ்டமர்கள் உள்ளே வந்தனர். அப்போதும் கடை உரிமையாளர் கண்டுகொல்லாமல் மொபைல் போனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார் .

‘தாத்தா … வரும் போது எனக்கு ஐஸ்கீரிம் வாங்கிட்டு வா..என்று பேரன் சொன்னது நினைவுக்கு வர உடனே கடை ஊழியரை பார்த்து.

‘தம்பி…

‘சொல்லுங்க சார்..

‘ஐஸ்கீரிம் எங்க இருக்கு….?

‘சார்…. அங்க ஓனரு உக்காந்திருக்காருள்ள. அதுக்கு பக்கத்தில இருக்கு … என்று

அவன் சொன்னவுடன் அதன் பக்கத்தில் சென்றார் பெரியவர்.

இரண்டு வெண்ணிலா பேமிலி பேக் ஐஸ் கீரிமை எடுத்து கடை ஊழியரிடம் கொடுத்து பாக்கிங் செய்யச் சொல்லி விட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்தார் அந்த பெரியவர்.

சிறிய பிரிஜ்ஜில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து பார்த்துக் கொண்டுருந்த போது.. கடை உரிமையாளரின் மொபைல் போனில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தின் வசனத்தின் சத்தம் அவரை கவனத்தைத் திருப்பியது..

குளிருட்டப்பட்ட கடை என்பதால் வசனங்கள் கொஞ்சம் தெளிவாகவே கேட்டது…

அந்த வசனத்தைக் கேட்டு ஏதோ சிந்தித்த பெரியவர் சுற்று முற்றும் பார்த்தார். யாரும் கவனிக்காத நேரத்தில் சிறிய பிரிஜ்ஜில் வைத்திருந்த விலை உயர்ந்த பெரிய சாக்லேட் இரண்டை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் பெரியவர்.

அதை சற்று தூரத்திலிருந்து பார்த்த கடை ஊழியர் அதிர்ச்சியடைந்தார்… இருந்தாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல்..

சார்….உங்களுக்கு வேற எதுவும் வேணுமா…?

‘இல்ல போதும்பா.. பில் எவ்வளவு ஆச்சு…..

890 ரூபாய் சார்…

சரி அதையெல்லாம் கொண்டா..

கடை ஊழியருக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. பார்ப்பதற்கு வசதி படைத்தவர் போல இருக்காரே. இவர் ஏன் இந்தச் செயலை செய்யனும் என்று தயங்கியபடி பெரியவருக்கு முன்னால் வந்து நின்றான். தன் கையில் வைத்திருந்த பையை அவரிடம் கொடுத்துவிட்டு. அவரின் பேண்ட் பாக்கெட்டை பார்த்தபோது சாக்லேட்டின் கவர் கொஞ்சம் வெளியே தெரிந்தது..

இருந்த போதும் மீண்டும் ஒரு முறை

சார்….உங்களுக்கு வேற எதுவும் வேணுமா…என்று கேட்டார் கடை ஊழியர்

‘இல்ல… போதும்பா’ என மீண்டும் சொன்னார் அந்தப் பெரியவர்..

முதலாளி அருகே சென்ற கடை ஊழியர் அவர் காதில் எதையோ சொன்னார்…தான் பார்த்துக்கொண்டிருந்த மொபைல் போனை வைத்துவிட்டு பெரியவர் இருக்கும் திசையை நோக்கி கடை முதலாளி பார்த்தபோது அந்தப் பெரியவர் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.

சார்….கொஞ்சம் இங்க வாங்க ….

அருகில் வந்த பெரியவரை பார்த்து.

சார்…. உங்க பேண்ட் பாக்கெட்ல என்ன சார் வச்சுருக்கீங்க.. அதை கொஞ்சம் வெளிய எடுங்க…

ஏன்..

இல்ல எங்க கடை ஊழியர் நீங்க சாக்லெட்டை எடுத்து வச்சிருக்கீங்கன்னு சொன்னார்.. அதான் கேட்டேன்….

இல்லையே நான் எடுக்கலேயே…..

அப்ப என்ன சார் அந்த பாக்கெட்ல . அதை வெளியே எடுங்க…..

சார்.. இது உங்களுக்கு தேவையில்லாதது…

ஏன் சார் தயங்கிறிய … என்று கூறிக் கடை ஊழியரை விட்டு பெரியவர் பேண்ட் பாக்கெட்ல உள்ள சாக்லேட்டை எடுக்க சொன்னார் கடை உரிமையாளர் .

இதைச் சற்றும் எதிர்பாராத பெரியவர் .கடை முதலாளியைப் பார்த்து..

என்ன சார் என்னைய அசிங்கபடுத்தீரீங்களா…. என்று கோபமாக கேட்டார் அந்த பெரியவர்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை மற்ற வாடிக்கையாளர்களும் கவனிக்கத் தொடங்கினர்.

பெரியவருக்கும் கடை முதலாளிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னணி இசையாக ஒலித்தது மொபைல் போனில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தின் இசை …

ஒரு வழியாக தன் பாக்கெட்டில் ஒழித்து வைத்திருந்த சாக்லெட்டை வெளியே எடுத்தார் அந்த பெரியவர்.

என்ன சார் இது……. என்று கூறி கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் கடை உரிமையாளர் …

ஏன் சார் இந்தத் திருட்டுத்தனம் …. என்ற சத்தம் கடையில் கொஞ்சம் கூடுதலாகவே ஒலித்தது.

கடையில் ஆங்காங்கே விலகியிருந்த மற்ற கஷ்டமர்கள் மெல்ல ஊர்ந்து ஒன்று கூடி இந்த இருவரையும் சுற்றிவளைத்தனர்…

கடை முதலாளி பெரியவரை பார்த்து . சார்.. கடையை நாங்க ஒன்னும் சும்மா நடத்தல கஷ்டபட்டு சம்பாதிச்சு வட்டிக்கு கடன் வாங்கி நடத்திறோம். உங்களை மாதிரி ஆட்கள் திருடிட்டுப் போனா நாங்க எப்படிப் பொழைக்க முடியும் என்று படபடப்புடன் பேசியனார் கடை முதலாளி..

இதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் கடை உரிமையாளப் பார்த்து.

உங்க பொருளை திருடியதற்கு கோபப்படுறீங்களே…

நீங்க செய்த காரியம் மட்டும் திருடியதற்கு சமம் இல்லையா……. என்று கேள்வி கேட்ட பெரியவரை பார்த்து நெற்றியை சுருக்கியபடி

நான் என்ன சார் தவறான காரியம் செய்தேன் …….என்றார் கடை உரிமையாளர்.

சுற்றியிருந்த கஷ்டமர்கள் கொஞ்சம் குழம்பியபடியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடை உரிமையாளரை பார்த்து அந்த பெரியவர்.

உங்க செல்போன கொஞ்சம் எடுங்க ……

ஏன் எதுக்கு செல்போன கேட்கீறீங்க…

கொஞ்சம் எடுங்க சார் … என்று கோபமாகவே சத்தம் போட்டார் பெரியவர்

தயங்கியபடியே கடை முதலாளி செல்போனை எடுத்து பெரியவரிடம் கொடுக்காமல் தன் கையிலேயே வைத்திருந்தார். தன்னிடம் கொடுக்காததை அறிந்த பெரியவர் கடை முதலாளி கையில் இருந்த செல்போனை பிடிங்கி அங்கு சுற்றியிருந்த மற்ற வாடிக்கையாளருக்கு செல்போனில் ஓடிக்கொண்டிருந்த அந்த திரைப்படத்தை காண்பித்து. சற்று கோபமாக….

இந்தப்படம் இன்னைக்கு ரிலீஸ்…அத இவர் செல்போன்ல பாக்குராரே.. இது திருட்டுதனமல்லையா….இவர் பொருளை திருடினால் கோபம் வருதுல்ல… அது மாதிரி இதுவும் திருட்டு இல்லையா என்று சொல்லி விட்டு செல்போனை கடை உரிமையாளர் கையில் திணித்தார் பெரியவர்.

இதை உணர்த்தத்தான் நான் உங்க கடைச் சாக்கலேட்டை எடுத்தேன் என்றார் பெரியவர்.

கையில் செல்போனை வாங்கிக்கொண்ட கடை உரிமையாளர்.

அதைக்கேட்க நீங்க யார் சார்….?

நான்தான் இந்தப்படத் தயாரிப்பாளர் தண்டாயுதபாணி என்ற பெரியவர் சொன்தைக் கேட்டபடியே

கையில் வைத்திருந்த செல்போனை பார்த்தார் கடை உரிமையாளர். அதில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படம் முடிந்து..

தயாரிப்பு..

தண்டாயுதபாணி … என்று பிரீஸாகி நின்றது…

கடை உரிமையாளர் ‘‘ என்னை மன்னிச்சிடுங்க சார்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *