சிறுகதை

யார் கடவுள் ? – தருமபுரி சி.சுரேஷ்

இதுவரைக்கும் ஒரு மனுசனாக் கூட எங்களை மதித்ததில்லை ; இப்ப எங்கள் தெரு ஆட்கள் எங்களை தெய்வமா நினைக்கிறாங்க என்று ராஜா மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

தன்னை தெய்வமாக நினைத்த ராமசாமியை பார்த்து “சார் அம்மாவுக்கு நான் ராஜா; உலகத்துக்கு இல்லை; ஒழுங்கா படிச்சு இருந்தா ஒரு நல்ல வேலைக்கு போய் இருக்கலாம்; கௌரவம் இருந்திருக்கும்”

“ராஜா பழச நெனச்சி வருந்தாத; இப்ப நீயும் உன்ன சார்ந்தவர்களும் எவ்வளவு முக்கியமான வாங்கன்னு. இந்த உலகம் அறிந்து உணர ஆரம்பிச்சிடுச்சு”

சார் என்னைய சமாதானப்படுத்த ஏதேதோ சொல்றீங்க; நானும் ஒழுங்கா படிச்சிருந்தா படிச்ச புள்ளைய பார்த்து கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்; என்ன செய்றது எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவை பெயிலானேன்; கணக்கு பாடம் ஆமணக்கு ;ஆங்கிலம் தினம் பிணக்கு” என தன் நிலையை எண்ணி வருந்தி பெரியவர் ராமசாமி ஐயாவிடம் புலம்பினான்

ராமசாமி ஐயா இரக்கப்பட்டு “ராஜா இந்தா உன் குடும்ப செலவுக்கு வைத்துக்கொள் என இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தார்; கூடவே பத்து கிலோ புழுங்கல் அரிசியும் கொடுத்தார்”

ராஜ கண்கலங்கினார்: சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல

“எப்படியும் சொல்லாத உண்டியலில் போற காசை இப்படி எங்களுக்காக பாடுபட்டு உழைக்கிற உனக்கு இந்த நேரத்துல கொடுக்கிறதில எனக்கு ஒரு மனதிருப்தி” என்றார். பிறகு அந்த இடத்தை விட்டு ராஜா கடந்து சென்றான்.

இந்த வேலைக்கு தான் எப்படி வந்தேன் என்பதை அவன் யோசித்துப் பார்த்தான்.

‘‘ஆம் அம்மாவின் மூலம்தான் இந்த வேலைக்கு வந்தேன் அல்லவா’’

“டேய் ராஜா உனக்கு படிப்பு எல்லாம் வராது. பேசாம உங்க அப்பா வேலைக்கே வந்திடு” என்றாள் அம்மா.

“சரிம்மா படிச்ச பட்டதாரிகளுக்கே இந்த காலத்தில் வேலை கிடைக்கிறது. இல்ல பெரிசா நாம எதுக்கு யோசிக்கணும். .கிடைக்கிற வேலையை செய்யலாம்.

நம்ம படிச்சதுக்கு என்ன கலெக்டர் உத்தியோகமா கொடுப்பாங்க”என்றேன்

அம்மா சொன்னதற்கு சரி என்று தலையாட்டினேன் வயதான அப்பாவுக்கு ஓய்வு கொடுக்கலாம். அவர் பணியை இனி நான் தொடர்ந்து செய்யலாம் என முடிவெடுத்து ஆறு வருடமாக துப்புரவாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன்.

சேலம் மாநகராட்சியில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பேர் என்னைப் போல வேலை பார்க்கிறார்கள்.

எல்லாருக்கும் ஒரே வேலை என்றாலும் அதிலே பல பிரிவுகளாக இருந்தது. வீதியை கூட்டுவது, வீடுகள் தோறும் இருக்கின்ற குப்பைகளை அள்ளிச் செல்வது, குப்பை லாரியில் பயணித்து வேலை செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, இப்படிப் பல வேலைகள் இருந்தது.

எனக்குச் சாக்கடைகளை சுத்தம் செய்வதும் பாதாள சாக்கடைகளில் தூர் வாருகிற பணி அனுதினமும் உண்டு.

எனக்கு மூணு பெண் பிள்ளைகள் அரசாங்க பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிட்டு படிச்சிட்டு இருக்குதுங்க . அவங்க எதிர்காலத்துல நல்லா வரணும் மனசு பூரா ஆசையா இருக்கு எல்லாம் கடவுள் பார்த்துக்குவார்.

மூணு பெண் பிள்ளைகளும் நல்லா படிக்குதுங்க. ஆசையா அப்பா நான் முதல் மார்க் வாங்கி இருக்கிறேன். அதுவும் கணக்கு படத்திலேயும் ஆங்கில பாடத்திலேயும் நாங்க முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறோம்; அவர்கள் சொல்லும் போது மனம் குதூகலிக்கும்.

என்னால் முடியாதது என் பிள்ளைகளால் முடிகிறதே என்கிற பெரும்மகிழ்ச்சி.

நான் வேலை செய்ற இடத்திலேயும் பலவிதமான பாகுபாடுகள் இருந்தது. அதுல நிரந்தர பணியாளர், தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலின்னு பிரித்து இருந்தார்கள். நான் ஒப்பந்தப் பணியாளரா இருக்கிறேன்.

ஒரு நாள் லீவு போட்டாலும் சம்பளத்தை பிடித்து விடுவார்கள் .

என்னோட படிச்ச ராம் இந்த மாவட்ட கலெக்டராக இருக்கார்; ஊரடங்கு உத்தரவை எல்லாருமே கடைப்பிடிக்க வேண்டும்னு சொல்றாரு; இது எங்களுக்கு நடைமுறையில் சாத்தியமில்லை.

சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கணும்னு சொல்றாங்க; இதயும் எங்களால பின்பற்றுவது கடினம் .

என் நண்பன் ராமுவை எல்லோரும் கவனிக்கிறார்கள். காரணம் அவர் படித்த மாவட்ட ஆட்சியாளர். படிப்புக்கு தனி மரியாதை இந்த சமூகத்தில் இருக்கிறது.

அன்று படிப்பின் அருமையை நான் உணர்ந்தும் ஏனோ இந்த மண்டைக்குள் படித்த பாடங்கள் பதிய மறுத்து விட்டது.

சரி எல்லாம் தலைவிதி.

கிடைத்த வேலைக்கு கடவுளுக்கு நன்றி செலுத்துவோம் என தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

ராஜாவுக்கு மாத வருமானம் பத்து ஆயிரம்; மாதம் ஒன்றாம் தேதி என்றால் கடன்காரர்கள் வீட்டு வாசலில் வந்து நின்று எட்டு ஆயிரத்தைப் பிடிங்கி செல்வார்கள்

மீதிப் பணத்தை வைத்து குடும்ப வாழ்வை நடத்த வேண்டும்.

அம்மா நாலைந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்து துணி துவைத்து சம்பாதிக்கும் மூன்று ஆயிரம் ரூபாய் வீட்டுத் தேவைக்கு பயன்படுகிறது.

இந்த கொரோனா நாட்களில் உயிரைப் பணயம் வைத்துதான் நாங்கள் பணி செய்கிறோம்.

சக மனிதர்களிடம் நாங்கள் வேண்டுவது எங்களை எப்போதும் சரிசமமாய் உங்கள் கூட்டங்களில் ஒருவராக மதியுங்கள். அன்பு செலுத்துங்கள்; கடவுளுக்கு நிகராக எங்களை பூஜித்து பின்வரும் நாட்களில் எங்களை மறந்து விடாதீர்கள் என்பதே ஆகும்.

இப்பொழுது எனக்கு இராமசாமி ஐயா தான் கடவுளாக தெரிகிறார். என் கஷ்டத்தை உணர்ந்து என் குடும்ப நிலைமையை யோசிச்சு அவர் கொடுத்த உதவியை எப்பொழுதும் என்னால் மறக்க இயலாது.

ஆகவே யாரும் எங்களை கடவுளாக நினைக்க வேண்டாம் சக மனிதர்களாக நினையுங்கள்; எங்கள் தேவைகளை சந்தியுங்கள் அது போதும்.

ராமசாமி ஐயாவின் அரிசி வீட்டில் பொங்கிக் கொண்டிருந்தது. அவனும் அவன் பிள்ளைகளும் தாயும் நிம்மதியாக உணவை உண்டு உறங்கிக் கிடந்தார்கள்.

ராஜாவின் கனவில் அவனுடைய பாதத்திலே அனேகர் அரிசி மூட்டைகளை வைத்து வணங்குவது போல கனவு கண்டான்.

இந்த அன்பு உள்ளங்களுக்கு இன்னும் என்னால் என்ன செய்யமுடியும் இதைத்தவிர எனக் கண் கலங்கினவனாய் கனவிலே காணப்பட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *