சென்னை, டிச. 4–
கடந்த சில மாதங்களாக புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 45
மருதாணி, சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், மஹாலக்ஷ்மி, பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நேத்ரன் நடித்துள்ளார். விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களில் 20 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்தார். சின்னத்தரை மட்டுமின்றி, திரைப்படங்களிலும் நேத்ரன் நடித்துள்ளார்.
நடிகர் நேத்ரன், சின்னத்திரை நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேத்ரனின் மனைவி தீபாவும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு அபிநயா மற்றும் அஞ்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அபிநயா சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அஞ்சனா சமீபத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது மகள் அபிநயா தனது தந்தை புற்றுநோயால் பாதித்திருப்பதை சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்ததார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேத்ரன் இல்லத்துக்கு சென்று, அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.