சிவகங்கை, ஜூலை 18–
ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும்” என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறையின் ரெய்டு குறித்து, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:–
“அமலாக்கத்துறை தேவையில்லாத ஒன்று. சோதனை கைது என்பதெல்லாம் கண் துடைப்புத்தான். சம்மன் மூலமாகவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். யாரோ ஒருவர் ரசிப்பதற்காகவே இப்படி சோதனை நடத்துகிறார்கள். இதன் மூலம் இந்தி, இந்துத்துவாவை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள். ஆயுத கடத்தல், போதை மருந்து விற்பனை, தீவிரவாதம், ஆள்கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களின் மூலம் பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் அதனை கண்டறியத்தான் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது.
கூட்டணிக்கு சாதகம்
அதனை விடுத்து அமலாக்கத்துறையை பாஜக அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. உண்மையான வழக்கு, விசாரணை என்றால் அமலாக்கத்துறை சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும், ரெய்டு என்பது முறையானது அல்ல. ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது எளிதானது அல்ல. சில மாநிலங்களில் சிக்கல் உள்ளது, தேர்தல் வரும்போது காங்கிரசர மையப்படுத்தி தேசிய அளவில் கூட்டணி அமையும் என்று கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.