செய்திகள்

யாரும் புண்படக்கூடாது என்பது திராவிடம்; மற்றவரை புண்படுத்தி மகிழ்வது ஆரியம்

Makkal Kural Official

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை நீக்குவதா?

ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை, அக். 19–

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது என, ஆளுநருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், அதன் பொன்விழா ஆண்டு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற வரியை மட்டும் விட்டுவிட்டு, பாடலைப் பாடினர். இச்சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:–

புண்படுத்தி மகிழ்வது ஆரியம்

‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிட நல்திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.

“யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம்”. இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்’. இவ்வாறு துணை முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *