பிச்சமுத்து தன்னிடம் இருப்பதிலேயே சற்று வெள்ளையாகத் தெரியும் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். பெட்டியில் ஒளித்து வைத்திருந்த கதர் சட்டையையும் அணிந்து கொண்டான். வீட்டை விட்டு மிடுக்காகக் கிளம்பினான்.
நாலைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பான். எதிரில் வந்துவிட்டார் அண்ணாசாமி. அவனைப் பார்த்து விட்டார். “என்ன பச்சமுத்து மிடுக்காக எங்க கிளம்பிட்டே?” என்று கேட்டார்.“எங்க போவாங்க? இன்னிக்குத் தேர்தல் நாளாச்சே… ஓட்டு போடத்தான் போறேன்”
“அதான பார்த்தேன். உன் நடையிலேயே அது தெரிஞ்சுதே. சரி யாருக்கு ஓட்டுப் போடப் போறே?”
“அது வந்து…?”
“சும்மா சொல்லு பச்சமுத்து.”
“அது …வந்து அண்ணாசாமி அண்ணே. நாங்க வழக்கமாக குரங்கு சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போட்டுக்கிட்டு வர்றோம். அதான் உங்களுக்குத் தெரிஞ்ச விசயம்தானே அண்ணே.”
“என்ன பிச்சமுத்து இப்படிச் சொல்லிட்டே… நான் சோ.மு.மு.க. கட்சியில வட்டச் செயலாளரா இருக்கேன். உனக்குத் தெரியுமில்லே… அப்படி இருக்கும்போது நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடாம, செக்கு மாடு மாதிரி அந்தக் குரங்குச் சின்னத்துலேயே ஏன் எப்பவும் குத்தறே. இப்ப நான் சொல்றேன். இந்த வாட்டி எனக்காக, இந்த அண்ணனுக்காக குருவியில தான் குத்துறே?”
“அது வந்து… அது எப்படி அண்ணே?”
“நீ ஒன்னும் சொல்லாத பிச்சமுத்து. இந்தா இதப்பிடி. செலவுக்கு வச்சுக்க. இத ஓட்டுக்குக் காசு தந்ததா நெனைக்காத. உம் மேல எனக்கு எப்பவும் பிரியம் உண்டு, பிச்சமுத்து. உனக்கு ஒன்னுனா நான் எப்பவும் வந்து நிப்பேன். சொல்லிட்டேன், குருவியிலதான் குத்துறே” சட்டைப் பையில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தார் அண்ணாசாமி. அதைக் கையில் வாங்கிக் கொண்ட பிச்சமுத்து, “இதெல்லாம் வேணாம் அண்ணே…” என்றபடி திருப்பிக் கொடுக்க, அதை அவர் கையோடு மடக்கி அவன் பையில் திணித்தார்.
“சரிண்ணே… நீங்க ரொம்ப அன்பா சொல்றீங்க… இந்த வாட்டி மட்டும் உங்க கட்சிக்கே போடறேன்”
“உங்க கட்சின்னு சொல்லாதே. நம்ம கட்சினு சொல்லு பிச்சமுத்து” அவர் நகர்கிறார்.
சட்டைப் பையைத் தடவிக்கொண்டு சிரித்தபடியே நடக்கிறான் பிச்சமுத்து. ஒரு நிமிட நடைதான் நடந்திருப்பான்.
“அடே… பிச்சமுத்துவா… செம கலக்கலாயிருக்கியே… எங்க கிளம்பிட்டே?” என்றபடி முன்வந்து நின்றார் தம்பிமணி.
“அட மணி ஐயாவா… ஓட்டுப் போடத்தான் போய்க்கிட்டுருக்கேன் ஐயா… வழிய விட்டீங்கன்னா ஓட்டுப் போட்டுட்டு வந்துடுவேன்.”
“யே… என்ன ஓடப்பாக்குறே? யாருக்கு போடப்போறேன்னு சொல்லிட்டுப் போ”
“அதுவந்து மணி ஐயா… வழக்கமாக நாங்க கொரங்குச் சின்னம் தான்னு உங்களுக்குத் தெரியுமே?”
“அட என்ன இப்படிச் சொல்லிப்புட்டே. நம்ம ஆளு… நம்ம தலைவரு… நம்ம தொகுதியில நிக்கறாரு. கூட்டணியில நம்ம ஆளுக்குக் கெடச்ச இடம் இது ஒன்னுதான். நம்ம ஆள செயிக்க வைக்காம… நீ அந்த கொரங்குச் சின்னம்கிறியே ஞாயமா இது… நீ நம்ம கட்சிக்குத்தான் ஓட்டுப் போடறே. நான்தான் இந்த தொகுதியோட ஒருங்கிணைப்பாளர்னு தெரியுமுல்ல… அப்புறம் எங்கிட்டேயே நீ இப்படிச் சொல்றே?”
“இல்ல ஐயா… இப்பதான் கொஞ்சம் முன்னால அண்ணாசாமி அண்ணே வந்தாரு. அவருக்கு குருவிக்கு குத்தச் சொல்லி ஐநூறு ரூபா கொடுத்தாரு. நானும் சரின்னுட்டேன்…. அதனால…”
“அந்தப் பய கிடக்கான் விடு. இந்தா இத வச்சிக்க” பையில் இருந்து இரண்டு ஐநூறு எடுத்து அவன் பையில் திணிக்கிறார். “நீ நம்ம தலைவருக்குத்தான் ஓட்டுப் போடறே. தலைவர் செயிச்சு வரட்டும். உனக்கு என்ன வேணுமோ செஞ்சி தரச் சொல்றேன். மறந்துறாதே… நம்ம சின்னம் பெருச்சாளி சின்னம்… சொல்லு”
“பெருச்சாளி…”
“ஆங்… நல்ல கம்பீரமா நடந்து போயி நம்மச் சின்னத்துல குத்திட்டு வா பிச்சமுத்து…”
அவருக்குத் தலையாட்டியபடி ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடையைத் தொடர்கிறான் பிச்சமுத்து. அப்பத்தான் கன்னையா வந்து, “என்ன பிச்ச… எங்க பந்தாவா கிளம்பிட்டே?” என்றபடி கையைப் பிடித்துக் கொள்கிறான்.
“அப்பாடா… வாப்பா தோழா. ஓட்டுப்போடத்தான் போறேன்.”
“சரி எதுக்குப் போடப்போறே?”
“என்ன அப்படிக் கேட்டுட்டே. எப்பவும் நம்மச் சின்னம் குரங்குச் சின்னம்தானே!”
“இந்த உதார்தான் என்கிட்ட வேணாம்கறது. குருவிக்குப் போடறதா சொல்லி மாவட்டச் செயலாளர் அண்ணாசாமி கிட்ட காசு வாங்கிக்கிட்ட. பெருச்சாளிக்குப் போடறதா சொல்லி ஜாதிக்கட்சி செயலாளர் கிட்டயும் காசு வாங்கிட்டே. எனக்குத் தெரியாதுன்னு நெனைக்காதே. இப்ப சொல்லு உன் ஓட்டு எந்தக் கட்சிக் கூட்டணிக்கு?”
“கண்ணா… கிட்டவா… உங்கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன். இந்த வாட்டி ‘ஓட்டர் லிஸ்ட்ல’ என் பேரு இல்லப்பா… எப்படியோ நீக்கப்பட்டிருக்கு. எனக்கு ஓட்டு இல்லைனு சொல்ல வெட்கமா இருக்கு. அதனாலதான் ஓட்டுப் போடப்போறதா பந்தாக் காட்டிக்கிட்டுக் கிளம்பினேன்…”
“அட… கொப்புறான, அப்புறம் ஏன் அந்த ரெண்டு பயக்கிட்டயும் காசு வாங்கினே? காசு வாங்கறது ஜனநாயகத் துரோகமில்ல…-?”
“நீ சொல்றபடி அது தப்புதான். ஆனா அந்த ரெண்டு பேருமே ‘அத செஞ்சித் தரேன், இதச் செஞ்சித் தரேன்னு’ சொல்லி என்கிட்டயே ஒன்னு ரெண்டு தரம் ஆட்டய போட்டுட்டானுங்கப்பா.. அதுல இருந்துதான் கொஞ்சம் திரும்ப வசூல் பண்ணிக்கிட்டேன். அவ்வளவுதான்”
“சரி.. சரி… கிளம்பு… அடுத்த தேர்தலுக்குள்ள ஓட்டர் லிஸ்ட்ல ஒழுங்கா பேரைச் சேரு…”
“சரி.. சரி… வரட்டுமா?”
அதே தோரணையுடன் நடையைக் கட்டுகிறான் பிச்சமுத்து.