செய்திகள்

யாருக்கு உங்கள் ஓட்டு? ‘துக்ளக்’ சத்யா பேனாவில் ‘புனர்ஜென்மம்’ சோ–அட்வைஸ்!

கலமானவர்களுக்கும் இதனால் அறிவிப்பது என்னவென்றால்:

‘‘ஏப்ரல் 18ம் தேதி பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடைபெறுகிற இந்த நேரத்தில் துக்ளக் சோ மட்டும் இல்லாமல் போய் விட்டாரே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டாம்; அவர் இருந்தால் யாருக்கு ஓட்டு, எப்படி ஓட்டு என்று அவரது வாசகர்களையும் அபிமானிகளையும் வழிநடத்தி இருப்பார் என்று கவலையோடு பழங்கதை பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் ஒன்று செய்யலாம்.

டிவி வரதராஜன் நடத்திக்கொண்டிருக்கும் துக்ளக் தர்பார்நாடகத்திற்கு நடையை கட்டலாம். அப்போது அந்த இரண்டு மணி நேரத்தில் அவர்களுக்கு தெளிவான ஒரு தெளிவு பிறந்தாலும் பிறக்கும்.

காரணம் சோ இருந்திருந்தால் என்ன சொல்லி இருப்பாரோ, அதை அவருடைய அச்சு அசலாகவே மேடையில் தோன்றி இருக்கும் டி.கே.ரமேஷ், சோ பாணியில் சொல்லி இருக்கிறார் என்றால், ஆகா கண் திறந்து விட்டார் என்று கை தட்டி கொண்டே யாரும் வீட்டுக்கு நடையை கட்டலாம்.

‘‘மண்ணை விட்டு மறைந்தாலும் மனசைவிட்டு மறையவில்லை; கண்ணை விட்டு மறைந்தாலும் கருத்தைவிட்டுக் கரையவில்ல’’

என்று அடையாளம் காணப்படுகிறவர் துக்ளக் சோ. மனசில் பட்டதை பட்டவர்த்தனமாக, சிதறுகாய் உடைப்பது போல உடைத்து, விழி திறக்கும் அந்த புத்தியில்…, அவர் காட்டியிருக்கும் அதே உத்தியில்…, நிழலாகவே அவரோடு துக்ளக் இதழில் வளர்ந்து வந்திருக்கும் துக்ளக் சத்யா, இன்றைக்கு நாடகமேடையில் ஆசான் வழியில் கண்திறந்து இருக்கிறார், கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார் என்றால் அந்த அரசியல் நையாண்டி நாடகம்தான் துக்ளக் தர்பார்,டிவி வரதராஜன் குழுவின் அமர்க்களமான படைப்பு!

முழு நீள அரசியல் நையாண்டி.. நாடகம். நாடகத்தில் நாயகன் துக்ளக் டிவி வரதராஜன் என்று கண்ணெதிரில் தெரிந்தாலும், அவர் இன்றி எதுவுமில்லை என்று சொல்லக்கூடிய இடத்தில் பிள்ளையார் சுழி போட்டு பெருமையாக பேச வைத்திருக்கும ‘யதார்த்த நடை’ நாயகன்துக்ளக் சத்யா. எடுத்த எடுப்பில் அவரை பாராட்டிவிட்டுத் தான் கலைஞர்களையும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்ட வேண்டும். இல்லாவிட்டால் அவர் நாவும், பேனாவும் நம்மை மன்னிக்காது! (சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்! சட்டி – சத்யா, ஆப்பை டிவி வரதராஜன்)

மொட்டைத் தலை, டார்க் கிரீன் அதாவது அடர் பச்சை நிறத்தில் பேண்ட முழுக்கை சட்டை, முன் நெற்றியில் திருநீர்க் கோடு, அதன் கீழே கறுப்பில் பொட்டு, மைக் முன் வந்து நின்றதும் குதிரை கணைப்பது போல கணைப்பு நடக்கிற போது மெதுவேக நடையில், பேசுகிறபோது மொட்டைத் தலையை தடவிக் கொண்டு, ஒரு பக்கக் காதை ஆள்காட்டி சுட்டுவிரல் – கட்டை விரலால் வருடிக்கொண்டு, மென்மை கலந்த கீச்சுக்குரலில டி கே ரமேஷை ‘சோ’ தோற்றத்தில் நேரில் பார்த்ததும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி.(ஏன், 30 ஆண்டு நெருங்கிய நண்பர் இல.கணேசனுக்கும் தான்)

நாடகம், சினிமா, டிவி என்று 3 துறைகளிலும் டி கே ரமேஷ் தன்னை பதிவு செய்து கொண்டு இருந்தாலும் இது நாள் வரைக்கும் அவருக்கு இல்லாத ஒரு வரவேற்பு – அங்கீகாரம், துக்ளக் தர்பார் நாடகத்தில் சோ வேடத்தை ஏற்று இருப்பதன் மூலம் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரே நாள் இரவில் இந்நிலையில். அவரை இனி சோ ரமேஷ் என்று அங்கீகரித்து, ஆனந்தக் கூத்தாடலாம்.

* அதுவரை வி. சி. கணேசன் என்று இருந்தவ,ர் சிவாஜி நாடகத்தை மேடை ஏற்றிய பின் அதில் சிறந்த நடிப்புக்காக கதாபாத்திரமாகவே மாறியதன் எதிரொலியாக அவரது பெயருக்கு முன் சிவாஜி அடைமொழி ஒட்டியது போல,

* அதுவரை டி. கே. சண்முகம் என்று இருந்தவர் ‘அவ்வையார்’ நாடகத்தை மேடை ஏற்றிய பின், அதில் சிறந்த நடிப்புக்காக, கதாபாத்திரமாகவே மாறியதன் எதிரொலியாக அவரது பெயருக்கு முன் ‘அவ்வை’ அடைமொழி ஒட்டியது போல,

* டி. கே. ரமேஷ் பெயரில் சோ அடைமொழி ஒட்டிக்கொள்ள, இனி அவரை ‘சோ’ ரமேஷ் என்றே அழைக்கும் நிலை உருவாகிவிடும். முன்கூட்டியே வாழ்த்துக்கள்!

பூலோகத்தில் பார்லிமெண்ட் தேர்தல அறிவிக்கப்பட்டதும், மேலோகத்தில் இருக்கும் சோவை நேரில் சந்திக்கிறார் நாரதர். தமிழகத்திலிருந்து நேர்மையான 40 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதற்காக சோவின் சிபார்சின் பேரில் துக்ளக்கும் அவரது உதவியாளர் பதூதாவும் சென்னைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

துக்ளக், பதூதா இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் தலைவர்களின் சமாதி முன்னால் உட்கார்ந்து ‘தியானம்’ முடித்த பின்பு… அடுத்தடுத்து ஆளுங்கட்சி முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், டெல்லி பிரதான ஆளும் கட்சியின் பிரதிநிதி, புதிதாக அரசியலில் களத்தில் இறங்கியிருக்கும் பிரபல திரை நாயகன் – இவர்களையெல்லாம் சந்திக்கிறார்கள். அவர்களிடம் அரசியல் பாடம் படிக்கும் நிலைக்கு ஆளாகும் துக்ளக்கும்… பதூதாவும் விழி பிதுங்கி, செய்வது அறியாமல் மீண்டும் மேலோகம் சென்று சோவை சந்தித்து தங்களின் அனுபவத்தை வேதனையோடு முறையிடுகிறார்கள். அவர்களின் விளக்கத்தைக் கேட்ட பிறகு நாட்டுமக்களுக்கு சோ தரும் அறிவுரை என்ன, ஓட்டு யாருக்கு என்று பாடம் நடத்துவதே நாடகத்தின் கிளைமாக்ஸ்.

1970, 1980களில் துக்ளக் சோ நடந்து காட்டிய அதே நடையில் டிவி. வரதராஜன், அவரது உதவியாளர் பதூதா, சங்கர் குமார், புதிய கட்சி துவக்கி களத்தில் குதித்திருக்கும் திரை நாயகன் கிரிஷ், முதல்வர் ஸ்வயம்பிரகாஷ், துணை முதல்வர் இளங்கோ, எதிர்க்கட்சித் தலைவி லட்சுமி, தனியார் தொலைக்காட்சி நிருபர் ராமானுஜம், டெல்லி பிரதான கட்சி பிரதிநிதி, தஸ்தகீர், தலைமை பெண் செயலாளர் நதியா, நாரதர்….ஸ்ரீதர்.

மேடையில் தோன்றியிருக்கும் 10 நடிகர்களில் யாருடைய நடிப்பு சிறப்பு, யாருக்கு முதலிடம், இரண்டாமிடம் என்று பட்டியலிட்டு காண்பது என்பது மிகவும் சிரமம், சிக்கலான காரியம். அவரவர்கள் தோன்றும் காட்சிகளில் ஒவ்வொருவரும் கைதட்டலை சம்பாதித்து அரங்கையே சிரிப்பலையில் மிதக்கி விடுகிறார்கள் என்றால் அது ஒவ்வொருவரின் நடிப்புக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. அனைவரையும் அற்புதமாக வேலை வாங்கி இருக்கும் இயக்குனர் டிவி வரதராஜனுக்குத்தான் அத்தனை பெருமையும், பாராட்டும், வரவேற்பும், வாழ்த்தும்!

மதுரை கண்ணனின் அரங்க அமைப்பு, பின்னணி இசை பாராட்டுக்குரியது.. நாடகம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்போது 1980 – 1990களில் ஒலிப்பது போலவே ஷோபனா ரவி எச்ஸ் ராமகிருஷ்ண ஐயா போன்ற அன்னாள் செய்தி வாசிப்பாளர்களின் குரலை காதில் ஒலிக்க விட்டு

டிவி வரதராஜனின் ‘துக்ளக் தர்பார்’:

கண்ணில் தெரிகிறார் சோ;

காதில் ஒலிக்கிறார் ‘துக்ளக்’ சத்யா;

அரசியல் நையாண்டி நாடகத்தில்

110 நிமிடங்களும் வெடிச்சிரிப்பு!

* * *

‘தலைவர்கள் இல்லை, இனிஎஜமானர்களே!

‘‘அரசியல்வாதிகள் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கத் தொடங்கினதுக்குப்புறம், மக்களா திருந்தலேனா அவங்களை ஆண்டவனாலையும் காப்பாத்த முடியாது.

தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்கள் வியாபாரமாக்கிட்டாங்க. நல்ல விலை கிடைக்கறதுதான் அவர்களுக்கு முக்கியமே தவிர, நல்ல தலைவர்கள் அல்ல.

வசதியுள்ள வாக்காளர்கள் கூட பிச்சைக்காரர்கள் போல பணத்தை வாங்க தயாரா க்யூவுல நிக்கும்போது, இனிமே தலைவர்கள் உருவாக மாட்டார்கள்; எஜமானர்கள் தான் உருவாகுவார்கள்

‘‘யதா ராஜா, ததா பிரஜா அப்படீன்னு சொல்லுவா. நம்ம ஜனநாயகத்துல யதா பிரஜா, ததா ராஜாங்கறதுதான் சரி’’ –

என்று சொல்லிக் கொண்டு வரும் ஒரு ஆங்கில வார்த்தையின் உச்சரிப்பை மறுபடியும் திருத்திச் சொல்லி அந்த வார்த்தை மூலம் உங்கள் ஓட்டு யாருக்கு? என்பதை பார்வையாளர்களுக்கு புரிய வைக்கிறாரே.

சத்யா, அசத்(து)யா!

* * *

திரை நாயகனை டிவி நிருபர் பேட்டி காணும் காட்சியில் நாயகனின் பதில். சத்யா, வயிறைப் புண்ணாக்குகிறார். நாயகனும் – பேட்டியாளரும் பலே, பலே. நாயகனே நேரில் வந்து பார்த்தாலும் களுக்…களுக்…கென்று சிரித்து விடுவார்

  • வீ.ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *