சிறுகதை

யாயும் ஞாயும் யாராகியரோ….. | ராஜா செல்லமுத்து

Spread the love

யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப்பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே

– குறந்தொகை –40

– செம்புலப்பெயல்நீரார்.

விடிவதற்கு முன்னே ரொம்பவே சூடாக இருந்தது வில்பட்டி கிராமம்.

எங்கும் ஒரே கூச்சல் குழுப்பம். தொட்டுவிட்டால் பிரச்சனை பற்றிக்கொள்ளுமோ என்ற பயத்தில் ஊரே பதற்றத்தின் பிடியில் சிக்கித் தவித்தது,

அண்ணே தங்கச்சி எஙகேயும் போயிருக்காது….

எப்படியாவது கண்டுபிடிச்சிருவோம். நீங்க எதுவும் வருத்தப்பட வேண்டாம்.

எப்பவும் போல உங்க வேலையப் பாருங்கண்ணே.. நீங்க இப்படி இருக்கிறது, எங்களுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ஒன்னு உசுரோட கொண்டு வருவோம்,

இல்ல பொனமா தூக்கிட்டு வருவோம். இந்த ரெண்டுல ஒண்ணு ராத்தரிக்குள்ள கண்டிப்பா நடக்கும் என்று விருமாண்டிக்கு ஆதரவாய் பேசிக்கொண்டிருந்தான் முனி.

கண்கள் இரண்டும் கோவைப்பழமாய் சிவந்து கிடக்க ஏதோ ஒன்றை

வெறித்துப் பார்த்த படியே இருந்த விருமாண்டியின் தோளை ஆதரவாய் தொட்டாள் தமயந்தி.

ஓடுகாலிக் கழுத இப்படி செய்வாண்டு நினைச்சு கூடப்பாக்கலயே….

நம்மப் புடிச்ச பீடை இன்னைக்கோட போயிருச்சுனு நினைச்சுங்க என்று மனைவி சொன்னதும் விருமாண்டி கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தான்.

இரு அவள அந்தப்பய கூட விடக்கூடாது. அவ என்னோட மக மட்டுமல்ல.அவ என்னோட உசுரு. அவ இல்லன்னா நான் உசுரோடவே இருக்க மாட்டேன் என்று விருமாண்டி கொஞ்சம் அழுதபடி சொன்னான்.

மாமா நீ ஏன் வருத்தப்படுற, விடியறதுக்குள்ள தனிக்கொடி வீட்டுல இருப்பா,,,உத்திரவாதத்தைக் கொடுத்தான் இன்னொரு உறவினன்.

போங்க தேடுங்க. நம்ம சொந்த பந்தம் ஊரு, உறவு, கூடப் படிச்சவங்க ,பழகுனவங்க, பாத்தவங்கங்கன்னு ஒன்னு விடாமத் தேடுங்க. அவ இந்த மண்ண விட்டு போயிரக்கடாது. இந்த ஒரு ராத்திரி மட்டும் அந்தப்பய கூட இருந்தான்னா, நம்ம மானம், மரியாதை எல்லாம் போயிடும். எம்பொண்ணு களங்கப்படாம அப்பிடியே வேணும்.

இந்த ஒரு ராத்திரி அவளத் தேடாம விட்டீங்க அவ்வளவு தான். இது நாள் வரைக்கும் நாமசேத்து வச்ச கவுரவம் மரியாதை எல்லாம் சுக்கு நூறா போயிரும். வீராப்பு குறைந்த குரலில் சொன்னான் விருமாண்டி.

குளிர்ந்திருக்கிற நிலா அப்படியே இருக்கணும். மறுநாள் வானம் செவக்குறதுக்குள்ள எம்மக வீட்டுல இருக்கணும். இல்ல அந்த பய ஊரையே தீய வச்சு கொளுத்திப் புடுவேன் என்று மீண்டும் முறுக்க

அணணே இந்தா உடனே கிளம்புறோம். வரும் போது தனிக்கொடியோட தான் வருவோம். இல்ல…. அத… நாங்க சொல்ல மாட்டோம் என்ற விருமாண்டியின் படை வேகமாக கிளம்பியது.

*

ஊரை விட்டு ஓடிப்போன தனிக்கொடியும் யுவராஜூம் உயிரைக் கையில் பிடித்தபடியே ஒரு பேருந்தில் போய்க்கொண்டிருந்தனர்.

தனிக்கொடி

ம்….

இப்ப எங்க போறோம்…

தெரியல…

நாம செய்றது சரியா?

தெரியல…..

எல்லாத்துக்கும் தெரியல தானா?

ஆமா என்று தலையை மட்டுமே ஆட்டினான் யுவராஜ்.

என்னைய எவ்வளவு பிடிக்கும் தனிக்கொடி

ம் ….தெரியல

என்னது தெரியலையா

ஆமா….

என்னைய உனக்கு பிடிக்குமா பிடிக்காதா

எல்லாத்துக்கும் தெரியல ன்னு சொல்ற. நான் சொன்னா மட்டும் உனக்கு கோபமா….

அப்படின்னா சும்மா தான சொன்ன

இல்ல நான் சொன்னது நிசம்.

நெசமாவா சொன்ன

ஆமா செல்லச்சிணுங்கல் சிணுங்கினாள் தனிக்கொடி.

உட்காந்திருந்திருந்த இரண்டு பேரின் தோள்களும் ஒன்றோடொன்று உரசியது. இருவருக்குள்ளும் ஒரு எரிமலையே உற்பத்தி ஆனது.

*

டேய்….

தனிக்கொடி எங்க போயிருக்கும்.

தெரியல

ஏய் லூசு அந்தப்புள்ளைய எவனோ ஒருத்தன் காதலிச்சிட்டு இருந்தானாம். ஒரு வேளை அவன் தான் கூட்டிட்டு ஓடியிருக்கணும்.

எப்படி சொல்ற

கூடப் படிச்ச பயலையும் காணாமே

ம்….

அப்படின்னா நம்ம தனிக்கொடிய அவன் தான் கூட்டிட்டு போயிருக்கணும்

அப்படித்தான……

ஆமா அப்படித்தான்

அந்தப்பய வீட்டுலயும் ஆளக்காணோம்.

அவங்க வீட்டுல எதுவும் விசாரிச்சீங்களா?

இல்ல.

ஏன்?

உசாராயிருவானுக அதான் விசாரிக்கல.

ஓ….

விடியறதுக்குள்ள தனிக்கொடிய கூட்டிட்டு போகலன்னா விருமாண்டி அண்ணண் அந்தப்பய ஊரையே கொளுத்திப்புடும்.இந்த ராத்திரிக்குள்ள கண்டுபிடிச்சிரலாமா? எப்படியாவது கண்டுபிடிக்கனும்

ம்…

அப்படியில்லன்னா நம்மள கொன்னுபுடுவான் விருமாண்டி

ம் …

எங்க போயிருக்க போறாங்க?

டேய் அவன் என் கையில மட்டும் சிக்கட்டும் அதுக்கு பெறகு தான் இருக்கு தீபாவளி.

*

யுவா……

ம்…..

உங்க அப்பா எப்பிடியிருக்காங்க

நல்லா இருக்காங்க

உங்க அப்பா எப்பிடியிருக்காங்க

நல்லா இருக்காங்க

எங்க அம்மாவ உங்களுக்கு தெரியுமா?

இல்ல

எங்க அம்மாவை ?

தெரியாது

ரெண்டு பேரோட குடும்பம் ரெண்டு பேருக்கும் தெரியாது.

ஆமா தனிக்கொடி

யுவா நான் ஒன்று சொன்னா கேப்பியா?

ம் சொல்லு

நாம இப்படி ஓடி வந்திட்டோமே. நம்ம குடும்பத்தில இருக்கிறவங்க என்ன மாதிரி வருத்தப்படுவாங்க. நாம இந்த காரியத்த செய்யறதுனால அவங்களுக்கு அவமானம் ஏற்படும்ல.

ஆமா

நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிருவமா

ஏய்….. என்ன இப்படி சொல்ற?

ஆமா யுவா இது எனக்கு என்னமோ மாதிரியாருக்கு

இவ்வளவு தூரம் நம்மள வளர்த்து ஆளாக்கி படிக்க வச்சவங்க நம்மளுக்கு ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தி தரமாட்டங்களா என்ன?

தனிக்கொடி யுவராஜன் தொட்டுப்பேசும் போது யுவராஜூக்கும் அதுவே சரி எனப்பட்டது

சரி ரெண்டு பேரும் பிரிஞ்சிரலாம் என முடிவெடுத்துத் திரும்பினர்.

*

ஏய்….. அங்கபாரு தனிக்கொடிய

எங்க….?

அங்க ஒருத்தன் கூட போய்ட்டு இருக்கா பாரு

ஆமா…

விடாத பிடி பிடி

ஓடிப்பிடிக்க ஆயத்தயமானது விருமாண்டியின் கூட்டம்.

ஜோடியை நெருங்கியது கொலைகாரக் கும்பல்.

அரிவாளை உருவினான் முனி.

ஏய் என்ன பண்ற….

சும்மா இருடா…. இவங்க ரெண்டு பேரையும் இங்கேயே சோலிய முடிச்சிருவோம்.

அண்ணண் அப்படி சொல்லலியே

இதான் நல்ல சந்தர்ப்பம் விடக்கூடாது ரெண்டுபேரையும் போட்டுருவோம்.

டேய் வேணாம்டா….

யாருண்ணே தெரியாத ஒரு பயகூட போய்ட்டு வந்திருக்கா. இவள போயி இன்னும் உசுரோட வைக்கனுமா?

உருவிய அரிவாளை எடுத்து அப்படியே ஒரு போடு போட்டான்.

இரண்டு பேரும் அதே இடத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தனர்.

டிரிங் டிரி்ங் முனியனின் செல்போன் சிணுங்கியது.

என்ன முனியா ஏதாவது தகவல் தெரிஞ்சதா?

இல்லண்ணே தேடிட்டு இருக்கோம்.

ஆமா என்னோட தனிக்கொடிய எப்படியாவது கூட்டிட்டு வந்திரு

சரிண்ணே…….

விடியறதுக்குள்ள கண்டிப்பா தனிக்கொடி வீட்டுல இருப்பா என்றான் முனியன்.

கொலை செய்யப்பட்ட தனிக்கொடி யுவராஜ் இரண்டு பேரையும் அந்த இரவே ஆள் நடமாட்டம் இல்லாத இடம் தேடி எரிப்பதற்குத் தூக்கிச்சென்று கொண்டிருந்தார்கள்.

இரண்டு பேரின் ரத்தமும் அந்தச் செம்மண் புழுதியில் இரண்டறக்கலந்து கிடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *