யானைப் படம் வரைந்த திருப்தியில் இருந்தாள் அபர்ணா. அவள் வரைந்த படத்தை அப்படியும் இப்படியும் ஆக திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள். இந்தப் படத்தைப் பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோசம். அவ்வளவு பெரிய உருவத்தை தன் கையால் வரைந்தது பெருமிதம் என்று தன்னைத்தானே தோள் தட்டிக் கொண்டாள் அபர்ணா.இதை யாரிடமாவது காட்டலாமா? சந்தோசப்படுவார்களா? திட்டுவார்களா ? கல்யாண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண் இதைப் போய் காட்டிக் கொண்டிருக்கிறாளே? என்று ஒரு மாதிரியாக பேசுவார்களா ?என்று அவளுக்குள்ளே ஒரு குழப்பம் மேலிட்டது .
சரி எப்படியும் அப்பா நம்மைத் திட்டப் போவதில்லை. அவரிடம் காட்டலாம்”
என்று யானைப் படத்தை எடுத்துப் போகும் போது அங்கே ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
“என்ன அபர்ணா. நோட்டுங்கையுமா இருக்கிற அது என்னது?
என்று கேட்டபோது
“ஒன்னும் இல்ல”
என்று நோட்டைத் தன் முதுகுக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள்.
“குடு பாக்கலாம்”
என்று நோட்டை அந்தப் பெரியவர் கேட்க
” இல்லை “
என்று அடம்பிடித்தாள் அபர்ணா.
” குடும்மா அவர் பாக்கட்டுமே ” என்று அபர்ணாவின் அப்பா சொல்ல
அந்த நோட்டை மனமில்லாமல் அவரிடம் நீட்டினாள் அபர்ணா
” அதில் வரைந்திருந்த யானைப் படத்தைப் பார்த்த அந்தப் பெரியவர்
” பரவாயில்லையே. ரொம்ப நல்லா வரைஞ்சு இருக்கிற. சிறப்பு உனக்கு வரையக் கூடத் தெரியுமா?
என்று அவர் கேட்க
“என் பொண்ணு அவ்ளோ அழகா வரைவா. ஸ்கூல்ல, காலேஜ்ல ஓவிய போட்டிகள்ல நிறையப் பரிசு வாங்கி இருக்கிறா. என்னஒன்னு ஓவியக் கல்லூரியில் படிக்க வச்சிருக்கணும் முடியல. இப்ப ஆர்ட்ஸ் காலேஜ் தான் படிச்சு முடிச்சு இருக்கா. “
என்று அப்பா சொல்ல
” இவ்வளவு பெரிய யானைய சின்னதா வரைஞ்சாலும் அழகா வரைஞ்சு இருக்கிறா. எது எது எங்க இருக்கணுமோ அது சிறப்பாக இருக்கு. இந்த பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. எவ்வளவு பெரிய குடும்பத்தையும் இவளால கட்டிக் காப்பாத்த முடியும்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கு. தரகர் சொன்னார் பெண்ண பாத்திட்டு வரலாம்னு. ஆனா இந்த பொண்ணு தான் எங்க வீட்டுக்கு மருமக “
என்று அப்போதே உறுதி கூறினார் அந்தப் பெரியவர்.
நடப்பது என்னவென்று தெரியாமல் விழித்தாள் அபர்ணா.
” அப்பா இவரு என்ன சொல்றாரு ?”
என்று வாய்விட்டு கேட்டாள் அபர்ணா
” ஆமா உன்ன பொண்ணு பாக்க வந்திருக்காங்க. உனக்கு தெரியாம இருக்கட்டும். ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்காக தான் எதுவுமே சொல்லல இவர் தான் உங்க மாமனார் “
என்று அந்தப் பெரியவரைக் காட்டிச் சொல்ல
அதுவரை மரியாதை நிமித்தமாக நின்று கொண்டிருந்த அபர்ணா வெட்கத்தோடு உள்ளே ஓடினாள். சிறிது நேரத்திற்கு எல்லாம் மாப்பிள்ளை வீட்டார்கள் அபர்ணா வீட்டுக்குள் வந்து அமர்ந்தார்கள்.
“இந்த பொண்ணு ரொம்ப சாமர்த்தியசாலியா இருக்கா. பெரிய யானை படத்த சின்னதா அழகா வரைஞ்சவ, கண்டிப்பா நம்ம குடும்பத்த சரியா வழி நடத்திப்போவா . இந்தப் பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்”
என்று அங்கேயே உறுதி கூறிச் சென்றார்கள் மணமகன் வீட்டார்கள். மிகுந்த சந்தோஷத்தோடு தான் வரைந்த யானைப் படத்திற்கு நன்றி கூறினாள் அபர்ணா.