செய்திகள்

யானைக்கு தீ: 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

நீலகிரி, மார்ச் 10–

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் யானைக்கு தீ வைத்த இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மசினக்குடி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டுயானை கடந்த ஜனவரி 3ஆம் தேதி மாவனெல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்தது. அப்போது, யானையை துரத்துவதற்கு விடுதி உரிமையாளர் ரேமண்ட் மற்றும் கூலி தொழிலாளி பிரசாத் ஆகிய இருவரும் யானை மீது, தீ பற்ற வைத்த துணியை வீசியதில், யானையின் காது பகுதியில் பலத்த காயமடைந்தது. தீ பற்றிய வலியில் யானை பிளிறியபடி ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜனவரி 19 ந்தேதி யானை உயிரிழந்தது.

குண்டர் சட்டம்

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், விடுதி உரிமையாளர் ரேமண்ட் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு கூடலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விடுதியின் மற்றொரு உரிமையாளரான ரிக்கி ரயான் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ”யானைக்கு தீ வைத்தது தொடர்பாக இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை கைது செய்ய காவல்துறை உதவியை கேட்டுள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *