சிறுகதை

யாசகம் – ராஜா செல்லமுத்து


பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த அந்தப் பிரதான ஹோட்டல் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது .ஆட்கள் வந்து போகும் பேருந்து நிலையம் என்பதால் அந்த ஹோட்டலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும் .கிருஷ்ணா, முரளி இந்த இரண்டு நபர்களும் திருமணமாகாத பேச்சிலர்கள் அதனால் காலை மாலை இரவு என்று மூன்று வேளையும் அந்த ஹோட்டலில் தான் அவர்களுக்கு உணவு .

தினமும் சாப்பிடுவதால் அந்த ஓட்டல் முதலாளி முதல் ஊழியர்கள் வரை அத்தனை பேர்களும் அவர்களுக்கு பழக்கம்.

வழக்கம்போல ஒருநாள் காலை உணவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலுக்கு சென்றார்.

வழக்கம்போலவே அந்த ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது கிருஷ்ணா சாப்பிட்டு முடித்து வெளியே வந்து நின்றிருந்தான். முரளி உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த ஹோட்டலுக்கு வெளியே அவன் கண்ட காட்சி அவன் மனதை ரொம்பவே உலுக்கியது .

ஒரு பெரியவர் கையில் ஒரு பையை தொங்கவிட்டுக் கொண்டு அந்த ஹோட்டலுக்கு வருபவர்களெல்லாம் வலிய போய் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். செக்யூரிட்டி வேலைக்கு உடைய உடை போட்டிருந்தார். இதை வெகு நேரமாக கவனித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா .

எதற்காக இவர் வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் வணக்கம் சொல்கிறார். எதற்கு இந்த வணக்கம்? என்று அவரை உற்று கவனித்துக் கொண்டிருந்தான். யாரும் அவரைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வெகு நேரமாக அவரை கவனித்த கிருஷ்ணா அவர் அருகில் போனோன்.

இங்க வாங்க என்று அந்த பெரியவரைக் கூப்பிட்டான். எதற்காக எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று கேட்டான்.

சும்மாதான் என்று தலையை சாெரிந்தார் .

சாப்பிட்டீங்களா? என்று கேட்க

சாப்பிட்டேன் ; அம்மா உணவகத்தில் நான் இட்லி சாப்பிட்டேன் என்றார்.

காபி சாப்பிடுறீங்களா? என்று கிருஷ்ணா கேட்டான்.

இல்ல வேண்டாம் என்று மறுத்தார்.

அவர் மதியம் சாப்பிடுவதற்கு தான்சொல்லாமல் .

பெரியவர் எந்த ஊர் ? என்று கேட்டான்.

நமக்கு மரியாதை தராத யாருக்கும் நாம மரியாதை கொடுக்கக் கூடாது. யார்கிட்டயும் யாசகம் கேட்க கூடாது .என்று சொல்லிய கிருஷ்ணா அவரின் கையில் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கிய அந்தப் பெரியவர்

ரொம்ப நன்றி என்று சொன்னார்.

செலவுக்கு வச்சுக்கங்க. பார்த்தா நீட்டா இருக்கீங்க . ஆனா செய்ற வேலையைப் பாருங்க. உழச்சு சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு நிற்கையில் முரளியும் சாப்பிட்டு வந்து சேர்ந்தான்.

அப்போது அந்தப் பெரியவர் அந்த ஹோட்டலை விட்டு கடந்து இருந்தார்.

ஒரு மனிதனை திருத்தி விட்டதாகவும் இனிமேல் அவர் இந்த ஹோட்டல் பக்கம் வரமாட்டார் என்று கிருஷ்ணா நினைத்துக் கொண்டிருந்தான்.

இந்த சின்ன விஷயத்தை முரளியிடம் சொல்ல வேண்டாம் என்றும் முடிவக்கு வந்தான். அவர்களின் பணிகள் முடித்து வழக்கம்போல அந்த ஹோட்டலுக்கு மறுநாள் சாப்பிட வரும்போது,

அதே பெரியவர் கையில்பையைத் தொங்கவிட்டுக் மறுபடியும் யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார்.

இதைப் பார்த்த கிருஷ்ணாவுக்கு கடுங்கோபம் வந்தது .

அந்தப் பெரியவரிடம் சென்றான்.

ஏன்? நான்தான் உங்கள எப்படி யாருகிட்டயும் யாசகம் கேட்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல . அப்புறம் எதுக்கு திரும்பி மறுபடியும் எல்லாருக்கிட்டயும் கேட்டுட்டு இருக்கீங்க என்றான்.

அந்த பெரியவர் சொன்னார்.

தம்பி நீங்க கொடுத்த காசு வீட்டில் இருக்கிற உடம்பு சரியில்லாத என் மனைவிக்கு மாத்திரை வாங்கிட்டு குடுத்திட்டேன்.இப்ப சாப்பிட பணம் வேணும் . வேற வழி இல்ல தம்பி . வயசாயிருச்சு. யாரும் வேலை தரல. வெட்கம். மானம். பாத்தா இந்த பூமியில உசுரு வாழ முடியாது. ஏதோ இருக்கிற வரைக்கும் ஓடட்டும் வாழ்க்கை என்று மறுபடியும் வருகிறவர் போகிறவர்களை பார்த்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர் .

கிருஷ்ணா கொடுத்த ஐம்பது ரூபாய் அவர் வாழ்க்கையை நீண்ட நாட்களுக்கு கொண்டு செல்லாது என்பதும் அவனுக்கு தெரிந்தது.

அவர் அங்கு வருபவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

யாராவது ஒருவர் நிச்சயம் யாசகம் கொடுப்பார் என்று நம்பிக்கையில் தன்னுடைய சுயமரியாதையை விட்டு வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *