புதுடெல்லி, ஜன. 31–
யமுனை நதி நீர் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை நதியில் அரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி, அரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் விஷம் கலப்பதாகப் பொய் கருத்து தெரிவித்து டெல்லி மற்றும் அரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது அரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது.
தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு, கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் ஆணையம் ஏற்கனவே தங்கள் நடவடிக்கையை முடிவு செய்துவிட்டதைக் குறிக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி தனது குரலை உயர்த்தியதற்காகத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. டெல்லி தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி குறித்து அவதூறு பரப்ப அதிக அமோனியா கலந்த விஷ குடிநீரை மக்களுக்கு வழங்குகின்றனர். இதுவும் ஒரு அரசியல் சதி தான் என்று அவர் கூறினார்.
எங்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கும், ஜனவரி 26–-27 முதல் யமுனையில் 7 பிபிஎம் ஆக இருந்த அமோனியா அளவு இப்போது 2 ஆக குறைந்ததற்கும் டெல்லி மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
டெல்லியில் இனப்படுகொலை செய்ய பாஜக அரசு யமுனை நீரில் “விஷத்தை” கலந்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகக் கோரி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் இன்று கெஜ்ரிவால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் கெஜ்ரிவாலுடன் இருந்தனர்.