போபால், செப். 28–
மத்திய பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேச தேர்தலில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பணவீக்கம் இரட்டிப்பு
மேலும் பாஜகவை கடுமையாகச் சாடிய சமாஜவாதி தலைவர், ‘பாஜகவின் நோக்கம் ஒருபோதும் தெளிவாக இல்லை, பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி, பணவீக்கம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து, மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை நாட்டின் ஒரு முக்கியமான தேர்தலாக மக்கள் கருத வேண்டும். இதன் முடிவுகள் நாட்டில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.