செய்திகள்

ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி; வி.சி.க.வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

திருச்சி, மார்ச்.31-

நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னமும், வி.சி.க.வுக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து தீப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்து துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை நாங்கள் செல்லும் இடங்களில் மக்கள் முக மலர்ச்சியோடு உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறார்கள். இங்கு மட்டும் இல்லை, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சின்னம், எளிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக தீப்பெட்டி உள்ளது. அதன் காரணமாக அந்த சின்னத்தை தேர்தெடுத்துள்ளோம். 24 மணி நேரத்திற்குள் தீப்பெட்டி சின்னம் தொகுதி முழுவதும் சென்றடையும். இந்த சின்னம் தொடர்பாக கடந்த 1 மாதமாக போராடி வந்தோம், பம்பரம் சின்னம் கிடைத்திருந்தால் சந்தோஷம். அடுத்ததாக நாங்கள் எதிர்பார்த்த சின்னம் தீப்பெட்டி தான், இந்த சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற கூடாது என்கிற ஒன்றை கருத்தில் அமைத்து திராவிட இயக்கங்களும் ஒன்று பட வேண்டும் என்பதாலேயே நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வி.சி.க.வுக்கு பானை சின்னம்

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னத்தை அரியலூர் மாவட்ட கலெக்டரும், சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும், எங்களுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தும் அலுவலரால் பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இயங்குகிற தேர்தல் பிரிவாக செயல்படுவது போல் உள்ளது.

தற்போதைய தேர்தலில் மக்களின் ஆதரவு பெருகுவதை பார்க்கையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *