செய்திகள்

ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, மார்ச் 16–

ஈரோடு பார்லிமெண்ட் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள ம.தி.மு.வு.க்கு ஒரு பார்லிமெண்ட் தொகுதியும் ஒரு ராஜ்யசபை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பார்லிமெண்ட் தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு பார்லிமெண்ட் தொகுதியில் ம.தி.மு.க. பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தார்.

கோவை தொகுதியில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை தொகுதியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக எம்.செல்வராஜ், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கே.சுப்பராயன் ஆகியோர் கட்சியில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் லீக் வேட்பாளர்

தி.மு.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லிம் லீக் கவுரவ ஆலோசகர் கே.நவாஸ்கனி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *