சிறுகதை

மோதிரக் கை – ராஜா செல்லமுத்து

தன் பிள்ளையின் படிப்பு செலவிற்காக யார் யாரையோவெல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் ரங்கநாதனை நாடினார் கேசவன்.

அதுவரையில் அறுந்து விழுந்த நம்பிக்கை அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.

வாங்க கேசவா எப்படி இருக்கீங்க? என்று நலம் விசாரித்தார் ரங்கநாதன் . கேசவனின் மகன் படிப்பிற்குண்டான செலவை அவரிடமிருந்து கேட்டுக்கொண்டார்.

அப்படியா அவ்வளவு பணத்தை என்னால கொடுக்க முடியாது கேசவா. நானும் உங்கள மாதிரி மாச சம்பளம் வாங்குற ஆள் தான். எனக்கு தெரிஞ்ச 10 பேர் இருக்காங்க . அவங்க இந்த மாதிரி படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்வாங்க. வேணா அவங்ககிட்ட நா சொல்லிப் பார்க்கிறேன். நீங்க தொடர்பு கொண்டா கண்டிப்பா அவங்க உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை கேசவனிடம் சொன்னார் ரங்க நாதன் .

சரி சார் .கண்டிப்பா நான் செய்கிறேன் என்று தலையாட்டிய கேசவனிடம் பையன் படிப்பிற்கான தொகை அத்தனையும் விலாவாரியாக ஒரு கடிதத்தில் எழுதி அதைப் பள்ளி கல்லூரிப் படிப்புகளுக்கு உதவி செய்யும் பெரிய மனிதர் குமாரமங்கலத்திடம் அனுப்பி வைத்தார் ரங்கநாதன்.

நம்பிக்கை வழியவழிய அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு கேசவன் குமாரமங்கலத்தின் வீட்டுக்குச் சென்றார். வாசலில் இருந்த காவலாளி கடிதத்தை வாங்கிக் கொண்டு குமாரமங்கலத்திடம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து கேசவனை அப்புறப்படுத்தினார் . செய்தியை ரங்கநாதனிடம் சொன்னார் கேசவன்.

கண்டிப்பா வந்து சேர்ந்திரும். நீங்க வருத்தப்படாம வீட்டுக்கு போங்க என்று சொன்னார் ரங்கநாதன்.

ரங்கநாதனின் வார்த்தைகளை அப்படியே நம்பிய கேசவன் எப்படியும் தன் மகனின் படிப்பு செலவிற்கு பணம் கிடைத்துவிடும் என்ற ஆறுதலோடு வீட்டுக்குச் சென்றார்.

ஒரு நாள் .இரண்டு நாள். ஒரு வாரம். இரண்டு வாரம். ஒரு மாதம் என காலம் கடந்து நின்றது. குமாரமங்கலத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நேராக கேசவன் குமாரமங்கலத்திடமிருந்து பதில் வராததை ரங்கநாதனிடம் சொன்னார் .

அடடே அப்படியா? உடனே நா செல்பேசிக்கு பேசுறேன் என்ற ரங்கநாதன் குமாரமங்கலத்தின் செல்பேசிக்கு தொடர்பு கொண்டார்.

அழைப்பது அரங்கநாதன் என்பதை அறிந்து கொண்ட குமாரமங்கலம் உடனே தன்னுடைய செல்பேசி எடுத்து

‘‘ஹலோ நான் குமாரமங்கலம் பேசுறேன். எப்படி இருக்கீங்க?’’ என்று விசாரித்தார்.

நல்லா இருக்கேன் என்று பதில் சொன்னார் ரங்கநாதன். படிப்பு விஷயமா நான் ஒரு நபருக்கு கடிதம் கொடுத்து அனுப்பினேன் அதை படிக்க முடிஞ்சதா? என்று ரொம்பவே பவ்யமான குரலில் கேட்டார் ரங்கநாதன்.

அது நீங்க அனுப்பிவிட்ட கடிதமா? எனக்கு தெரியாம போச்சே நான் என்ன பண்ணனும்? என்று தொலைபேசியிலேயே கேட்டார் குமாரமங்கலம்.

ஒன்னும் இல்ல எனக்கு தெரிந்த கேசவனுடைய புள்ளைக்கு படிப்பு செலவுக்கும் கல்லூரியில் பணம் கட்டவும் பணம் தேவைப்படுதுன்னு கேட்டார் . எனக்கு தெரிஞ்சு வள்ளல் குணம் உடைய உங்களத்தான் என்னால கை காட்ட முடிந்தது. என் எதிரில் தான் நிற்கிறார் . நீங்க சரின்னா அவர உங்க வீட்டுக்கு அனுப்புறேன்னு சொன்னார் ரங்கநாதன்.

ரங்கநாதன் நீங்க சொல்லிட்டீங்கல்ல. தட்ட முடியுமா? அவர அனுப்பி வையுங்க என்றார் குமாரமங்கலம்.

செல்பேசியை அணைத்த ரங்கநாதன் .குமாரமங்கலம் வீட்டிற்கு கேசவனைப் போகச் சொன்னார்.

கேசவனும் மகனும் அவசர அவசரமாக கிளம்பி குமாரமங்கலத்தின் வீட்டுக்கு சென்றார்கள் .உள்ளே சென்றவர்களை வரவேற்று காபி கொடுத்தார்கள் வந்தவர்களை குமாரமங்கலம் அனுசரணையோடு பேசினார் .

தம்பி உங்க பேர் என்ன? என்று படிக்கும் பையனிடம் கேட்க

அவன் தன் பெயரைச் சொன்னான்

எங்க படிக்கிறீங்க ? என்று கேட்க

படிக்கும் இடத்தையும் அவரிடம் படிப்பு பற்றிய விஷயங்களை கேட்டுவிட்டு

கேசவனிடம் வந்தார் குமாரமங்கலம்

என்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க என்று கேட்டபோது

ஐயா என்னோட பையன் படிப்புக்கு பணம் கட்ட முடியல .அதுதான் கேட்டேன் என்றார்

அப்படியா நீங்க என்ன வேலை பாக்குறீங்க ? என்று குமாரமங்கலம் கேசவனி டம் கேட்க

சின்னதா ஒரு ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன். குறைந்த சம்பளம் என்றார் கேசவன் .

சொந்த வீடு இருக்கா ? என்று குமாரமங்கலம் கேட்க

வீடு இருக்கு. இன்னொரு வீடும் இருக்கு அதில குடித்தனம் இருக்கிறவங்க வாடகை கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க என்பதையும் குமாரமங்கலத்திடம் சொன்னார்.

குமாரமங்கலம் தன் புருவத்தை மேலே உயர்த்தி சொந்த வீடு இருக்கா ?என்று கேட்டார்

ஆமா என்று தலையாட்டினார்

சரி தம்பிக்கு எவ்வளவு கட்டணம் கட்டணும் என்று கேட்க

ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொன்னார் கேசவன்

அப்படியா உங்க கல்லூரி கட்டணத்தை நானே கட்டிடுறேன். உங்க கல்லூரி கணக்கு எண்ணை கொடுங்க என்று குமாரமங்கலம் கேட்டபோது, தலையைச் சொரிந்தார் கேசவன்.

ஏன் என்ன ஆச்சு 2 என்று குமாரமங்கலம் கேட்டபோது

பணத்தை கட்டிட்டேன் .நீங்க கொடுத்தா கடன் வாங்கின இடத்தில திருப்பி கொடுத்திடுவேன் என்று சின்னதாக ஒரு பொய் சொன்னார் கேசவன்.

யாருகிட்ட கடன் வாங்கினீங்கா? என்று குமாரமங்கலம் எதிர் கேள்வி கேட்க

திருதிருவென முழித்தார் கேசவன்

சொல்லுங்க. அவர்கிட்ட நான் கடனை திருப்பி கொடுத்துடறேன் என்று சொல்ல

அதற்கும் பதில் சொல்லாமல் இருந்தார் கேசவன்.

என்ன என்ன ஆச்சு? என்று குமாரமங்கலம் சொல்ல.

ஒன்னும் இல்ல சார் என் கையில இருந்த மோதிரத்தை அடகு வச்சு என் பையனுக்கு கல்லூரிக் கட்டணத்தை கட்டிட்டேன். இப்ப நீங்க பணம் கொடுத்தா அத மீட்டிருவேன் என்று சொன்னார்,

அப்படியா? உங்க மோதிரத்தை அடகு வச்சு பையனுக்கு பணம் கட்டிட்டிங்களா? என்ற குமாரமங்கலம் கேட்டபோது

ஆமா சார் என்றார் கேசவன்.

உங்க பையன் படிப்பைவிட உங்க மோதிரம் பெருசில்ல. இந்த வருஷம் கட்டிங்க இல்லையா? சரி இந்த வருஷம் நான் உங்களுக்கு பணம் தரப் போறது இல்ல. மோதிரத்தை நீங்களே சம்பாரிச்சு திருப்பிக்கங்க. அடுத்த வருஷம் வாங்க. அந்த பையனுக்கு உள்ள தொகையை நான் கட்டுகிறேன் என்று குமாரமங்கலம் ஒரேடியாக அவர்களை விரட்டி விட்டார்.

தப்பு பண்ணி விட்டோமோ? என்று நினைத்த கேசவன் தன் மோதிர விரலை தடவிப் பார்த்தார் .

அதில் மோதிரம் மாட்டியே தடம் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *