செய்திகள்

மோட்டார் சைக்கிளில் ஊரைச் சுற்றிய தோனி

ராஞ்சி, மே 21–

ராஞ்சியில் எம்.எஸ். தோனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பெங்களூருவில் மே 18 ந்தேதி அன்று நடைபெற்ற கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே – பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பைக்கில் தோனி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அந்த வகையில் பெங்களூருவில் இருந்து தோனியும் அவரது குடும்பத்தினரும் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு திரும்பி உள்ளனர்.

தோனி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே ரசிகர்கள் அவரை சூழ்ந்து கோஷமிட்டனர். பலரும் தோனியுடன் செல்பி எடுக்க முயன்றனர். மேலும் தோனியின் மனைவி சாக்ஷி சிங் ராவத், ராஞ்சிக்கு சென்றதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், எம்.எஸ். தோனி பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் பைக்கில் செல்வதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தோனி பைக் எவ்வளவு பிடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் தோனி அவரது பைக்கில் சாதாரணமாக தெருக்களில் செல்லும் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவது வழக்கமானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *