செய்திகள்

மோடி மீது அமித் ஷாவுக்கு கோபம்: முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மேட்டூர், ஜூன் 12–

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பாஜக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கூட்டணியில் இருந்த திமுக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என நாங்கள் கொடுத்த பட்டியலை முழுமையாக படிக்கவில்லையா?

பாஜக-வின் 9 ஆண்டு ஆட்சியில் எந்த சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தது என்று கேள்வி கேட்டேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை.

திமுக ஆட்சியில் இருந்தவரை எய்ம்ஸ் என்ற ஒன்றே தேவைப்படவில்லை, மருத்துவ சேவை தரமாக இருந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தது ஒன்றிய அரசு, அதனால்தான் என்ன ஆனது என்று கேள்வி கேட்டேன்?

திமுக–வின் திட்டங்கள்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஆட்சியில் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து போன்றவை கிடைத்தது. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் வந்தது.

சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வந்தது.

தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.

மோடி மீது அமித் ஷா கோபம்

தமிழரை பிரதமராக்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதன் உள்நோக்கம் புரியவில்லை. தவிர, பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை’ என்றும் கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் ஒருவரை பிரதமராக அமித் ஷா அறிவிப்பாரா?

எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று அமித்ஷா கூறியிருக்கும் கருத்தை வரவேற்பதாகவும், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் ஆளுநர் தமிழிசைக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கும் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

முந்தைய காலங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக பெயர் போட்டுக்கொண்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சில திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எந்த திட்டமும் முடக்கப்படவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்து, தற்போது வரை அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாறு தெரியவில்லை

எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு தெரியவில்லை. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக ஜெயலலிதாதான் மாற்றினார்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை’ என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *