ஆர். முத்துக்குமார்
இன்னும் ஒரு வருடத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் முன், அடுத்த 20 நாட்களில் மத்திய பட்ஜெட் சமர்ப்பிப்பு நடைபெறும் நாள் நெருங்கும் சமயத்தில், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு சர்வதேச நிதியத்தின் இயக்குனர் பொருளாதார கொள்கைகளை மனம் திறந்து பாராட்டி இருப்பது ஆட்சியாளர்களுக்கு ஊக்க டானிக் என்பது தான் உண்மை.
இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் அன்டோனி சாயே கூறியதாவது:–-
சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரத்துக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமான நிலையில் உள்ளன. மற்ற நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமானது.
கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மற்றும் செப்டம்பருக்கு இடையில் இந்தியா 9.7% பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, சீனாவின் 2.2% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு அதிகம். நடப்பு ஆண்டு (2023) மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நடப்பு 2022–-23ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2022ல் 3.1% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021ல் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் போது காணப்பட்ட வேகத்தில் இது பாதியாக இருக்கும்.
மேலும், நடப்பு ஆண்டில் (2023) உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.2% ஆக குறையும். இது போருக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் குறைவாகும்.
உக்ரைன் –- ரஷ்ய போர் உள்ளிட்ட பாதகமான உலகளாவிய அரசியல் பதற்றங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமான வகையிலேயே உள்ளன. இதனால், 2022–-23 6.7% ஆக இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 2022-–23ல் 5.7% ஆக குறைந்தாலும், அடுத்த 2024–-25 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வேகம் 6.9% ஆக அதிகரிக்கும். இது உலக சராசரியை விட அதிகம்.
இந்தியாவுக்கு சாதகமான மற்றொரு முக்கிய அம்சமாக பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. மோடி அரசு பணவீக்கத்தில் எடுத்த வேகமான நடவடிக்கைகள் காரணமாக அதை விரைவாகவும், கணிசமான அளவிலும் கட்டுக்குள் வர உதவியது. முக்கியமான முன்னேறிய பொருளாதாரங்களைக் கொண்ட உலகின் பெரும்பாலான நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திணறி வருகின்றன. ஒரு சில நாடுகளில் பணவீக்கமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கூட அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மோடி அரசின் கொள்கை முடிவுகள் பணவீக்கத்தை விரைவாக கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி வேகத்தை துரிதமாக உதவியுள்ளது என்று அவர் பாராட்டி உள்ளார்.
சமர்ப்பிக்க இருக்கும் தேர்தல் வர இருக்கும் வருடத்திற்கு முன் வரும் பட்ஜெட் என்பதால் சலுகைகள், மக்கள் நலத் திட்டங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட்டில் மேலும் சுமைகள் இருக்காது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.