டெல்லி, மே 27–
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக்கின் எட்டாவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் 7 முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி, கேரளாவின் பினராயி விஜயன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் மான், தெலுங்கானாவின் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் ஆகியோர் நிதி ஆயோக்கில் பங்கேற்காத 7 முதலமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய ஒன்றிய அரசுடன் நேருக்கு நேர் மோதலில் சிக்கியுள்ள கெஜ்ரிவால், கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கான ஒன்றிய அரசின் உறுதிப்பாட்டை குற்றம் சாட்டி, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக நேற்று மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாப் மீதான பாஜக அரசின் பாகுபாடு குறித்து பகவந்த் மான் வருத்தமடைந்துள்ளார். அதனால் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டது என்று கூறி உள்ளார்.
புறக்கணிப்பு ஏன்?
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கூட்டத்தில் கலந்து கொள்வதாக முதலில் அறிவித்திருந்தாலும், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். தெலுங்கானா முதலமைச்சரைப் பொறுத்தவரை, கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை மத்திய அரசு புறக்கணித்து மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவது குறித்து அவர் வருத்தமடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பினராயி விஜயனும் வேறு அலுவல்கள் காரணமாக கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
இவர்களைத் தவிர, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் நிதி ஆயோக்கில் கலந்து கொள்கின்றனர். நாளை நடைபெறவிருக்கும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக 20 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.