செய்திகள்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரிப்பு

Makkal Kural Official

அமெரிக்கா வெளியுறவுத் துறை அறிக்கை

சென்னை, ஜூன் 27–

பிரதமராக 3 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

“இந்தியாவில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது.

மேலும் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக 3 முஸ்லிம்கள் மீது ரயிலில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில் முடிந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது.

250 தேவாலயங்கள் எரிப்பு

மணிப்பூரில் 250 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 60,000 க்கும் அதிகமானோர் இடப்பெயர்வு, சில இந்திய மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது என இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. இவை மத சுதந்திர பிரச்னைகள் குறித்து கவலைகளை எழுப்பியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“இந்தியாவில், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்ப்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிக்கை வெளியீட்டின் போது பேசினார்.

இந்த அறிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் மக்கள் நலத் திட்டங்கள், உணவு மானிய திட்டங்கள் மற்றும் மின்மயமாக்கல் போன்ற அனைத்துத் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கிறது எனவும் விளக்கமளித்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *