தலையங்கம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய சமநிலைக்கும் அமைதிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பின்னணியில் ரஷ்யாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் சமீபத்தில் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் பின்னணியில் இந்தச் சந்திப்பு நடந்தது என்பது முக்கியம்.
இருநாடுகளிடையே இருக்கும் பதட்டமான சூழல் தனிய இரு தலைவர்களும் 50 நிமிடங்கள் பேசி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் பங்குபெறுதல் இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்தச் சந்திப்பின் பின், பிரதமர் மோதி, “இந்தியா-சீனா உறவுகள், நமது மக்களுக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானவை. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதலால் இந்த உறவுகள் வழிநடத்தப்பட வேண்டும்” என்றார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சமாதானமாக தீர்ப்பது முக்கியம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.
எல்லைப் பகுதி பிரச்சினைகளைப் பற்றி பேசியது இன்றைய சூழலில் முக்கியம். 2020-ல் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியான சூழ்நிலை இன்னும் முழுமையாக தீர்வுக்காக காத்திருக்கிறது. இதற்கான தீர்வு, அமைதியான பேச்சுவார்த்தைகளால் மட்டுமே சாத்தியமாகும். எனவே இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் குறிப்பிட்டிருந்தது போல, சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து எல்லைப்பகுதிகளில் அமைதி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும் பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வுகளை கண்டறிவதற்கும் முன்வந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தையை மனதில் வைத்துக்கொள்வோம். அதன்பின்னர் ஜி 20 கூட்டத்தின் போது 2022 இல் இரு தலைவர்களும் சந்தித்தனர். ஆனால் விரிவான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் 2023 இல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது கூட சிறிது நேரம் மட்டுமே பேச முடிந்தது. இவ்வாறான அண்மைய சந்திப்புகளும் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியத்தையும் அதற்கான உணர்வையும் முன்வைக்கின்றன.
இந்தச் சந்திப்பு ஒரு தொடக்கப் படியாக அமையலாம். எல்லைப் பிரச்சினைகள் மீதான நெருக்கடியான நிலையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், இந்தியா-சீனா உறவுகளை வலுப்படுத்தவும் உலகளாவிய அமைதியையும் உறுதிபடுத்தும்.