Uncategorized

மோடி அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது: ராகுல்

டெல்லி, செப். 10–

எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்துள்ளது. மோடி தலைமையிலான அரசை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ராகுல் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று  வருகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:– ‘‘பிரதமர் மோடி அனைத்து பிரச்சினைகளிலும் மவுனம் காக்கிறார். அமைதியாக இருப்பது மட்டுமே அவருடைய வேலையாக மாறிவிட்டது.

பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் நிலை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

மோடி இந்தியாவிற்கு ஒன்றுமே செய்யவில்லை. ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்துள்ளது. மோடி தலைமையிலான அரசை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரதீய ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை நான் செய்யப்போகிறேன் என மோடி பேசினார். அதுபோலவே, மோடி தற்போது செய்து விட்டார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. பெட்ரோல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது என்றார்.

இந்த போராட்டத்தின் போது பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “ நாட்டு நலனுக்கு தேவையில்லாத பல விஷயங்களை மோடி அரசு செய்துள்ளது. வேறுபாடுகளை களைந்துவிட்டு நாட்டு நலனுக்காகவும் ஜனநாயகத்தை காக்கவும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வர வேண்டும் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *