செய்திகள்

மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி தோல்வி: காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்

புதுடெல்லி, பிப்.8–

பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார்.

கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியையும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பொருளாதாரம் பின்னோக்கி சென்றுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டுகிறது. பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது உள்ளிட்டவை இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கருப்பு அறிக்கையை வெளிட்டு மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம்.

ஜனநாயகத்தை

அழிக்கிறார்கள்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க.வால் 411 எம்.எல்.ஏ.க்கள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நிதிநிலைக்குழு தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெயந்த் சின்ஹா கூறுகையில், “நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள வெள்ளை அறிக்கை பிரதமர் மோடி இந்தியாவில் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டுக்கு முன்பு, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் இந்தியா பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டுப் போகும்போது இந்தியாவின் பொருளாதார நிலை எவ்வளவு மோசமாக இருந்தது, மோடி தலைமையிலான அரசு அதில் எவ்வாறு நேர்மறையான மாற்றத்தினை கொண்டு வந்தது என்பதை எடுத்துக்காட்டும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளாக காங்கிரசின் கறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *