போஸ்டர் செய்தி

மோடியை விமர்சித்த ராகுல் வருத்தம்

புதுடெல்லி,ஏப்.22–

மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாக தெரிவித்ததற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில் ரபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.

அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ” காவலாளி என கூறிக் கொள்பவரை திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி எம்.பியும் பாஜகவைச்சேர்ந்தவருமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத்தியுள்ளார்.

பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவே சொன்னேன்

தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என பாஜக எம்.பி. தொடர்ந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை, அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்றுதான் தெரிவித்தோம். ராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றது.

இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *