செய்திகள்

மோடியின் ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ள ஆங்கில நாளேடு

தண்டிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை, ஏப். 04–

மோடியின் ஊழல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் அவர்கள் தண்டிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இந்த நடவடிக்கையில் அரசியல் குறுக்கீடுகள் இருந்தால், அதையும் முறியடிப்போம்” என்று கூறினார். கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதலில் வெளி வந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 41,000 கோடி. ஆனால், எந்தவித விசாரணைக்கும் உட்படுத்த மோடி தயாராக இல்லை.

அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் முறைகேடுகளை சி.ஏ.ஜி. அறிக்கையாக வெளியிட்டது. ஆனால், இன்றைக்கு ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் முறைகேட்டை சி.ஏ.ஜி. பகிரங்கமாக அறிவித்த பிறகும் இதுகுறித்து விசாரணைக்கு உட்படுத்தவோ, கருத்து கூறவோ உலக மகா உத்தமர் மோடி இதுவரை முன்வரவில்லை.

பாஜகவின் ஊழலோ ஊழல்

ஊழலிலேயே மெகா ஊழல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியிருக்கிறது.

இன்றைக்கு ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி 45 கம்பெனிகள் குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் 33 கம்பெனிகள் கடந்த 7 ஆண்டுகளாக பூஜ்ஜிய லாபம் பெறாத 33 கம்பெனிகள் மொத்தமாக வழங்கியது ரூபாய் 576 கோடி. இதில் 75 சதவிகிதமான ரூபாய் 434 கோடி பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 33 கம்பெனிகளின் மொத்த நஷ்ட தொகை ரூபாய் 1 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கிற நிலையில் இந்த கம்பெனிகள் நன்கொடை தொகையை எங்கிருந்து வழங்கியது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த 33 கம்பெனிகளில் 16 கம்பெனிகள் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட 6 கம்பெனிகள் வழங்கிய ரூபாய் 646 கோடியில், ரூபாய் 601 கோடியை பா.ஜ.க. நன்கொடையாக பெற்றிருக்கிறது. இத்தகைய கம்பெனிகள் ரூபாய் 3.8 லட்சம் கோடி மதிப்புள்ள 179 மிகப்பெரிய அரசாங்க ஒப்பந்தங்களை நன்கொடை வழங்கிய பிறகு பெற்றுள்ளன. அதேபோல, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் 56 கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 2592 கோடி நிதியை வழங்கியுள்ளன. எல்லாவற்றையும் விட அதிர்ச்சியாக 16 ஷெல் கம்பெனிகள் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 419 கோடி நிதி அளித்துள்ளன.

மருந்து கம்பெனி நன்கொடை

பா.ஜ.க. அரசு மக்களின் உயிரோடு விளையாடியிருப்பதற்கு சில அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தரப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெறாத 7 மருந்து கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளித்துள்ளன. இதில் ஏறத்தாழ ரூபாய் 1000 கோடி நிதியாக வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே சளி மருந்துகள், ரெம்டெசிவர் போன்ற தரமற்ற மருந்துகளை தயாரித்ததற்காக அமலாக்கத்துறையால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் மனிதாபிமானமே இல்லாமல் பா.ஜ.க. நன்கொடை பெற்றிருக்கிறது.

நன்கொடை பட்டியலை ஆய்வு செய்து வெளியான தகவல்களின்படி நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் அனைத்துமே பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிறுவனங்களை பாதுகாத்து பா.ஜ.க. நன்கொடை பெற்ற பிறகு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அமலாக்கத்துறை பாதுகாத்து வருகிறது.

ஆனால், அதற்கு மாறாக 2014 முதல் 2022 வரை 121 அரசியல் தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. 2004 முதல் 2014 வரை மொத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 104. ஆனால், 2014 முதல் 2022 வரை 839 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 95 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மக்களவை தேர்தலுக்கு பிறகு அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட வேண்டுமென இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *