செய்திகள்

மோடிக்கு 75 வயது என்பதால் பாஜக வென்றால் அமித்ஷாதான் பிரதமர்

மும்பையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

மும்பை, மே 18–

மும்பையில் 20-ம் தேதி தேர்தல் நடப்பதையொட்டி மும்பை பாந்திரா – குர்லா காம்ப்ளக்சில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே போன்றோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், ”நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைப்பார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடிக்கு 75 வயதான பிறகு அமித்ஷா பிரதமராவார். விரைவில் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மோடியின் சிறை அரசியலுக்கு மக்கள் வாக்கு மூலம் பதிலளிக்க வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மோடியை மக்கள் நிராகரிக்கவேண்டும். என்னை நீங்கள் சிறையில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் மோடிக்கு வாக்களியுங்கள்.

சிறையில் அடைப்பார்

ஒரு நாடு ஒரு தலைவர்தான் நரேந்திர மோடியின் ரகசிய திட்டமாகும். மோடி மீண்டும் வெற்றி பெற்றால் உத்தவ் தாக்கரே, சரத் பவார், ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பார். சொந்த கட்சித்தலைவர்களையும் அழித்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்து யோகி ஆதித்யநாத் இருக்கிறார்” என்றார்.

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ”பிரதமர் மோடி வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பசிகொடுமையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு மோடி இருப்பார். பிரதமர் மோடி இருக்கமாட்டார். இன்றைக்கு பிரமோத் மகாஜன் இருந்திருந்தால் மோடி பிரதமராக இருந்திருக்கமாட்டார். பிரமோத் மகாஜன் தான் பிரதமராக இருந்திருப்பார்” என்றார்.

இதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “ஜனநாயகத்தை பாதுகாக்க மோடி தோற்கடிக்கப்படவேண்டும்” என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், “நிம்மதி இல்லாமல் அலையும் ஆத்மா மோடியின் விமர்சனத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. மோடியை அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை அந்த ஆத்மா ஓயாது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவேண்டும் என்பற்காக 400 தொகுதியில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள்” என்று எச்சரித்தார். சமாஜ்வாடி கட்சிதலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் முன்னாள் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் பேசினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *